EBM News Tamil
Leading News Portal in Tamil

மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு – வாக்காளர்கள் சிதறி ஓட்டம் | Lok Sabha Elections 2024: Firing at Manipur polling booth


இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

நாட்டின் 18-வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கி உள்ளது. அதற்காக நாடு முழுவதும் முதல்கட்டமாக 102 தொகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் மணிப்பூரின் உள்பகுதிகளில் உள்ள மக்களவைத் தொகுதிகளிலும், வெளிப்புறமுள்ள சில பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆவலுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இதனிடையே, அங்கு நடந்திருக்கும் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் வாக்காளர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வைரலாகி வரும் வீடியோவில், துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் வாக்களர்கள் சிதறி ஓடுவது பதிவாகியுள்ளது. அதேபோல் பிஷ்ணுபூர் தொகுதியில் வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினர்.

மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட இனக் கலவரம் மாநிலத்தை உலுக்கி வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று அங்குள்ள சில தொகுதிகளில் நடந்து வருகிறது. மாநிலத்தில் சில பகுதிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக பதற்றம் ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மணிப்பூரின் உள்பகுதியிலிருக்கும் தோங்ஜு தொகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மாநில முதல்வர் என்.பிரேன் சிங், லுவாங்சங்பம் மாமாங் லேய்காயில் தனது வாக்கை பதிவு செய்தார். மாநிலத்தின் பழங்குடி மக்கள் மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க மக்கள் தங்களின் வாக்கினை பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், “மாநிலத்தின் பழங்குடி மக்கள் மற்றும் ஒருமைப்பாட்டை காக்கவும், மாநிலத்தில் முன்பிருந்த அமைதி திரும்பவும் மக்கள் தங்களின் வாக்குகளை தவறாமல் பதிவு செய்யவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தமுறை பாஜக வேட்பாளர்களை நிறுத்தவில்லை, தனது கூட்டணிக்கட்சியான என்பிஎஃப்-க்கு ஆதரவினை அளித்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் நாங்கள் விரும்புகிறோம்.

எனவே மாநிலத்தின் சகோதர, சகோதரிகள் பாஜகவுக்கு வாக்களித்து மோடியின் கரத்தினை வலுப்படுத்த வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சில வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த போதிலும் மணிப்பூரில் 11 மணி நிலவரப்படி 28.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.