EBM News Tamil
Leading News Portal in Tamil

மதநல்லிணகத்தை சீர்குலைக்கிறது பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | BJP disrupting religious harmony Rahul Gandhi accuses


கண்ணூர்: நாட்டில் மதநல்லிணக்கத்தை பாஜக சீர்குலைக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் மக்களவை தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு கண்ணூர் தொகுதியில் போட்டியிடும் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், காசர்கோடு தொகுதியில் போட்டியிடும் ராஜ்மோகன் உன்னிதான் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் பன்முகத்தன்மையை மாற்ற பாஜக முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பன்முகத் தன்மையை ஏற்றுக் கொள்கிறது.

பாஜக தற்போது செய்வதை நாட்டில் எந்த கட்சியும் முயற்சித்ததில்லை. நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியல்சாசனம். அதுதான் நாட்டு மக்களுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகளை அளிக்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் இதர முகமைகள்தான் அரசியல்சாசனம் மற்றும் இந்திய மக்கள் உரிமைகளின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்புகளை எல்லாம் கையகப்படுத்தி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்பை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தி நாட்டின் தன்மையையே மாற்ற பாஜக முயற்சிக்கிறது. பலதரப்பட்ட மொழிகள், பாரம்பரியங்கள், வெவ்வேறான வரலாறுகள் மற்றும் நமது மக்களின் வெளிப்பாடுகளை நாங்கள் ஏற்கிறோம். நாட்டில் ஒரே வரலாறு, ஒரே நாடு, ஒரே மொழி ஆகியவற்றை இந்திய மக்கள் மீது திணிக்க பாஜக விரும்புகிறது.

நாட்டின் பன்முகத்தன்மையை மாற்ற முயற்சித்து பாஜக நேரத்தை வீணடிக்கிறது. பன்முகத்தன்மையை ஒருபோதும் மாற்ற முடியாது. பாஜக நேரத்தை வீணடிப்பதோடு, மக்களின் சக்தியை வீணடிக்கிறது. நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைக்கிறது. இது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

துணிச்சல் இல்லை.. கேரளாவின் பத்தனம்திட்டா வில் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது. “கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் மீண்டும் அமேதியில் போட்டியிடும் துணிச்சல் ராகுல் காந்திக்கு இல்லை. இம்முறை வயநாடு தொகுதியில் போட்டியிடும் அவரை அந்த தொகுதி மக்கள் எம்பி ஆக்கப்போவதில்லை” என்றார்.