அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்; முக்கிய அறிவிப்புகள் இருக்காது – அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் | interim budget on february no key announcement nirmala sitharaman
புதுடெல்லி: அடுத்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும்.
இந்நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்படும். தேர்தல்முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகே முழு பட்ஜெட் அறிவிக்கப்படும். இதனால், இந்தஇடைக்கால பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறாது” என்று தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அவ்வாண்டு ஜூலை மாதம் அவர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன் நேற்று மாநிலங்களவையில் தகவல் தெரிவித்தார்.
உற்பத்தித் துறை வளர்ச்சி: சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்ட போதிலும், இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “அனைத்துத் துறைகளின் பொருளாதார செயல்பாடும்நல்ல நிலையில் இருக்கிறது. குறிப்பாக, உற்பத்தித் துறை மேம்பட்டிருக்கிறது. மத்திய அரசின்‘மேக் இன் இந்தியா’, ‘உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை’ (பிஎல்ஐ) உள்ளிட்ட திட்டங்களால் உற்பத்தித் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.
நேரடி வரி வசூல் 22% உயர்வு: வரி வசூலைப் பொறுத்தவரையில், நடப்பாண்டில் நேரடி வரி வசூல் 22% அதிகரித்து இருக்கிறது. சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. வேலையின்மை 17 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது” என்றார்.