EBM News Tamil
Leading News Portal in Tamil

பாஜக ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்: 3 மாநில தேர்தல் வெற்றி குறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம் | People wishes BJP rule PM Modi proud election victory in MPs meeting


புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் பாஜக ஆட்சியை மக்கள்விரும்புவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவர் அரங்கத்தில் நுழையும்போது,எம்பிக்கள் ஆர்ப்பரித்தனர். “மோடிஜி, மோடிஜி’’ என்று ஒருமித்த குரலில் வாழ்த்தினர். அவர்களின் வாழ்த்துகளை கூப்பிய கரங்களுடன் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

பாஜக எம்பிக்கள் கூட்டம் மூடியஅரங்கில் நடைபெற்றது. இந்தக்கூட்டம் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு பாஜக தொண்டர்களே காரணம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 40 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்தது. இதில் 7 முறை மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதாவது அந்த கட்சியின் வெற்றி 18 சதவீதம் அளவுக்கே இருந்தது.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது 39 முறை சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. இதில் 22 முறை பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது பாஜகவின் வெற்றி 56 சதவீதமாக இருக்கிறது. இதன்மூலம் பாஜகவின் ஆட்சியை மக்கள் விரும்புவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று புள்ளிவிவரங்களுடன் பிரதமர் மோடி கூறினார்.

தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திராவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். அந்த மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து அவர் அறிவுரைகளை வழங்கினார்.

‘மோடிஜி’ என்று அழைக்க வேண்டாம். ‘மோடி’ என்று அழைத்தால் போதும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். இவ்வாறு அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் இளம் தலைமுறை, புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புவழங்கப்பட்டது. வரும் மக்களவைமற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.