தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? – 119 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை | Who will take power in Telangana vote Counting today in 119 constituencies
Last Updated : 03 Dec, 2023 07:04 AM
Published : 03 Dec 2023 07:04 AM
Last Updated : 03 Dec 2023 07:04 AM

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா முழுவதும் 48 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
ஆனால், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா ? அல்லது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றி முதன் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்குமா ? அல்லது, யாருக்குமே மெஜாரிட்டி வராமல் தொங்கு சட்டப்பேரவை அமையுமா? பாஜகவின் நிலை என்ன ? எனும் பல்வேறு கேள்விகளுக்கு இன்று மதியத்திற்குள் பதில் கிடைத்து விடும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் 90 சதவீதம் காங்கிரஸுக்கே வாய்ப்பு அதிகம் என அடித்து கூறியுள்ளன. இதனால், வரும் 9-ம் தேதி முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இவ்வளவு நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெறும் நிலையில் உள்ள வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், அவர் நேற்றிரவு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் அவசர அவசரமாக புறப்பட்டு ஹைதராபாத் வந்தார். அதற்கு முன்பாக, தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஸ்டார் ஓட்டலுக்கு இரவுக்குள் வந்து விட வேண்டுமெனவும் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கட்சி தலைமையும் டி.கே. சிவகுமாருக்கு தெலங்கானா விவகாரத்தை கவனிக்க முழு அதிகாரம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த பின்னர், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் சிறிது நாட்கள் வரை பெங்களூரு அல்லது கோவாவில் முகாமிட்டு ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவர் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
FOLLOW US