EBM News Tamil
Leading News Portal in Tamil

“தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்லும் நேரம் வந்துவிட்டது” – ராகுல் காந்தி | It is time for bye-bye KCR in Telangana, says Rahul Gandhi


ஹைதராபாத்: “கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார். காங்கிரஸை டேமேஜ் செய்யவும், பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு உதவவும் ஏஐஎம்ஐஎம் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. தற்போது தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்துக்கு வியாழக்கிழமை (நவ.30) தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிச.3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “என் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகிய மத்திய அரசின் ஏஜென்சிகள் எனக்கு எதிராக உள்ளன. ஆனால் கேசிஆர் மற்றும் ஒவைசி ஆகியோரின் மீது ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? நீங்கள் (கேசிஆர்) நடக்கும் பாதை காங்கிரஸால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மெட்ரோவை பயன்படுத்துவதில்லை; ஆனால், நீங்கள் பயன்படுத்தும் விமான நிலையம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது. கேசிஆர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக பணம் வழங்கும் அமைச்சகங்களை வழங்கியுள்ளார்.

நாட்டில் வெறுப்பை ஒழிப்பதே எனது நோக்கம், அதற்காக பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும். டெல்லியில் மோடியை தோற்கடிக்க வேண்டுமானால், தெலங்கானாவில் பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவை முதலில் தோற்கடிக்க வேண்டும். பிஆர்எஸ், பிஜேபி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. அவர்கள் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள்தான். கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்துகிறார். காங்கிரஸை டேமேஜ் செய்யவும், பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு உதவவும் ஏஐஎம்ஐஎம் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

தெலங்கானாவில் ஆட்டோவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல் காந்தியின் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆட்டோவில் பயணித்தபடி ஊர்வலமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி டிசம்பர் 9-ம் தேதி வெளிநாடு செல்ல விருப்பதாகவும், அவர் இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்ல விருக்கிறார் என்றும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் அவர் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.