EBM News Tamil
Leading News Portal in Tamil

“பாஜகதான் உலகின் மிகப்பெரிய, நம்பகமான அரசியல் கட்சி” – ராஜ்நாத் சிங் | Rajnath Singh slams Congress in Rajasthan


ஷாபுரா: காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானின் பெருமை, கண்ணியத்தில் வடுக்களையே ஏற்படுத்தியுள்ளது என்றும் பாஜகதான் உலகின் மிகப்பெரிய, நம்பகமான அரசியல் கட்சி என்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஷாபுராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ராஜஸ்தானின் பெருமை மற்றும் கண்ணியத்தில் வடுக்களை ஏற்படுத்தக்கூடிய பணிகளை மட்டுமே செய்துள்ளது. எங்கள் கட்சியில் உள்ள ஒரு நபர் தவறாக நடக்கலாம், ஆனால் எங்களுடைய கட்சி தவறான பாதையில் செல்லாது. பாஜகதான் உலகின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான அரசியல் கட்சி. நாங்கள் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், நிறைவேற்றியுள்ளோம்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக நாங்கள் உறுதியளித்தோம், அதை நாங்கள் செய்தோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று நாங்கள் உறுதியளித்தோம். அதன் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. ஜனவரி 22 அன்று ராமரை தரிசனம் செய்ய உங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றும் என நான் வாக்குறுதி அளிக்கிறேன். முன்னதாக, இந்தியா ஏதாவது சொன்னால், உலக நாடுகள் நம்மை பலவீனமான தேசமாகக் கருதினார்கள். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது” என்றார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 200 தொகுதிகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 25 ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.