EBM News Tamil
Leading News Portal in Tamil

“சஞ்சய் சிங் மீதான சோதனை, பாஜகவின் அவநம்பிக்கையை காட்டுகிறது” – கேஜ்ரிவால் சாடல் | ED raids on Sanjay Singh show BJP resorting to desperate measures: CM Kejriwal


புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் மீதான அமலாக்கத் துறை சோதனை என்பது பாஜகவின் அவநம்பிக்கையையே காட்டுகிறது என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி கடந்த ஓராண்டாக அவர்கள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எதையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. சஞ்சய் சிங் வீட்டில் நடக்கும் சோதனையிலும் எதுவும் கிடைக்காது. ஒருவர் (பிரதமர் மோடி) தோல்வியை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் அவநம்பிக்கை கொள்கிறார். அவநம்பிக்கையான செயல்களையே நாடுகிறார். அதுதான் இப்போது நடக்கிறது.

தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற ரெய்டுகள் அதிகரிக்கும். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை, காவல் துறை என அனைத்து விசாரணை அமைப்புகளும் முடுக்கிவிடப்படும். நேற்று பத்திரிகையாளர்கள் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனை நடந்தது. இன்று சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடக்கிறது. இப்படி பல சோதனைகள் நடக்கும். அச்சம் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை” என தெரிவித்தார்.

முன்னதாக, இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா, “அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சஞ்சய் சிங் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார். அதன் காரணமாகவே தற்போது அவர் குறிவைக்கப்பட்டு, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்பு நடந்த சோதனைகளில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்றும் எதுவும் கிடைக்காது. அமலாக்கத் துறை நேற்று பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இன்று சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.