EBM News Tamil
Leading News Portal in Tamil

காவிரி விவகாரம் | கர்நாடகாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு | Cauvery issue: Farmers, Kannada organizations protest in Karnataka: Tight security for Tamil areas


பெங்களூரு: தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கடந்த 18-ம்தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என நேற்று முன்தினம் தெரிவித்தது.

இதை கண்டித்தும், தமிழக அரசுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும் கர்நாடகாவில் நேற்று கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மண்டியாவில் உள்ள விஸ்வேஸ் வரய்யா சிலைக்கு முன்பாக நடந்த போராட்டத்தில் ஆதி சுன்சினகிரி மடாதிபதி நிர்மலானந்த சுவாமி பங்கேற்றார்.

பெங்களூருவில் கன்னட ரக் ஷனவேதிகே அமைப்பினர் அதன் தலைவர் பிரவீன் ஷெட்டி தலைமையில் அத்திப்பள்ளி டோல்கேட், கிருஷ்ணராஜபுரம், மைசூரு வங்கி சதுக்கம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகமுதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். காவிரிமேலாண்மை ஆணையம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தவும் கோரினர்.

அத்திப்பள்ளியில் நடந்த போராட்டத்தின்போது, கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் தடையை மீறி தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு போலீஸார் அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதேபோல மண்டியா அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.