EBM News Tamil
Leading News Portal in Tamil

இந்திய பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தவை – டபிள்யூஎச்ஓ தலைவர் பாராட்டு | Indian traditional medicine is the best – WHO chief praises


காந்தி நகர்: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பாரம்பரிய மருத்துவம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் பங்கேற்றார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மிக நீண்ட வரலாறு கொண்டவை. ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மிகச் சிறந்தவை. இந்த மருத்துவ முறைகள் நல்ல பலன் அளிக்கின்றன.

ஒவ்வொரு நாட்டின் தேசிய சுகாதார திட்டங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சேர்ப்பது அவசியம். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மகத்துவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் பேசினார்.

காந்தி நகரில் செயல்படும் ஆயுஷ்மான் பாரத் மையத்துக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். மத்திய அரசின் தொலை மருத்துவ சேவை திட்டத்துக்கும் அவர் புகழாரம் சூட்டினார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர்கள் பாரதி பிரவீண் பவார், எஸ்.பி.சிங், ஆயுஷ்துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோர் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.