EBM News Tamil
Leading News Portal in Tamil

கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழப்பு: தெலங்கானாவில் ம.பி. தொழிலாளர் குடும்பத்துக்கு நேர்ந்த கொடூரம் | Minor girl of migrant workers’ family from Madhya Pradesh dies after being gang-raped by four


ஹைதராபாத்: தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் வீட்டுச் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டச் சிறுமியை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் வாகனத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டு சென்ற நிலையில், இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா மாநிலம், பெட்டபள்ளி மாவட்டத்தில் உள்ள அப்பண்ணாபேட்டை கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு ரியல் எஸ்டேட் இடத்திலுள்ள கட்டிடத்தின் காவலாளி கண்காணிப்பாளருடன், மேலும் மூன்று நபர்கள் இணைந்து, அந்தச் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன், சிறுமியை மிகக் கொடூரமாக அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று சிறுமியும் அவர்கள் மிரட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை அப்பண்ணாபேட்டையை விட்டு மத்தியப் பிரதேசத்திலுள்ள அவர்களின் சொந்த ஊருக்கு தனியார் வாகனத்தில் செல்லுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, மத்திய பிரதேசத்துக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உயிரிழந்த சிறுமியின் கிராமத்துக்கு ஒரு போலீஸ் குழுவையும், குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேட ஒரு போலீஸ் குழுவையும் அனுப்பி வைத்துள்ளனர்.