EBM News Tamil
Leading News Portal in Tamil

சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி | Prime Minister Modi interacted with special guests


புதுடெல்லி: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை யாற்றினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். பலர் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த என்சிசி உறுப்பினர் அனுப்ரியா கூறும்போது, “எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என பிரதமர் என்னிடம் கேட்டார். அவர் என்னை ஊக்கப்படுத்தினார். நேரமின்மை காரணமாக என்னால் அவரிடம் எதுவும் சொல்ல முடிய வில்லை. ஆனால் அவரை அருகில் இருந்து பார்த்ததும், சந்தித்ததும் மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

என்சிசியின் மற்றொரு உறுப்பினர் லக்‌ஷமி குமாரி சர்மா கூறும்போது, “பிரதமர் எல்லோருடனும் கைகுலுக்கினார். எங்களைப் பற்றியும் எங்கள் படைப் பிரிவு பற்றியும் அவர் கேட்டறிந்தார். அவரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், போதுமான நேரம் இல்லாததால் அவருடன் பேச முடியவில்லை” என்றார்.

டெல்லியைச் சேர்ந்த கிரிஷி சவுஹான் கூறும்போது, “பிரதமரை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதன்முறையாக அவரை இப்போதுதான் அருகில் இருந்தபடி பார்த்தேன். விழா மேடையிலிருந்து இறங்கி வந்த அவர் எங்கள் அனைவரையும் சந்தித்து உரையாடினார். சாதாரண குடிமகனைப் போலவே அவர் எங்களுடன் கலந்துவிட்டார்” என்றார்.