EBM News Tamil
Leading News Portal in Tamil

கேரள மாநிலம் கொச்சியில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை | Senthil Balaji brother Ashokumar arrested in Kochi Kerala Enforcement action


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் அவரை கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதையடுத்து, மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, கரூரில் உள்ள அவரது தம்பி அசோக்குமார் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், உரிய ஆவணங்களை சேகரிக்க அவர் அவகாசம் கேட்டிருந்தார். பின்னர், இதயத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி, தாமதித்து வந்தார். இவ்வாறு 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

அவர் தலைமறைவாகி வெளிநாட்டில் இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் அசோக்குமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பிடித்தனர். விசாரணைக்காக அங்கு உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பிறகு அவரை கைது செய்த அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.