EBM News Tamil
Leading News Portal in Tamil

ஹரியாணா முஸ்லிம்களை காப்பது விவசாயிகளின் கடமை – ஹிசார் காப் பஞ்சாயத்து அறிவிப்பு | Farmers Duty to Protect Haryana Muslims – Hisar Khab Panchayat Notice


புதுடெல்லி: ஹரியாணாவில் மதக் கலவரத்தை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி, குருகிராமின் டிக்ரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஹிசார் மாவட்டத்தின் சுமார் 2,000 விவசாயிகளுடன் பாப் எனும் கிராமத்தில் நேற்று முன்தினம் காப் பஞ்சாயத்து கூடியது. இந்தக் கூட்டத்தில் நூ மதக் கலவரம் பற்றியும் டிக்ரி மகா பஞ்சாயத்தின் முடிவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதன் முடிவில், “நூவில் உருவான மதக்கலவரம் அனைவருக்கும் பொதுவானது. இதை முதலில் தீர்த்து வைக்க வேண்டும். ஹரியாணா முஸ்லிம்களை காப்பது காப் பஞ்சாயத்து உறுப்பினர்களான அனைத்து விவசாயிகளின் கடமை. இவர்களை மீறி, நூவில் எந்தவொரு முஸ்லிம் மீது யாரும் கைகூட வைக்க முடியாது. இவர்கள் பாதுகாப்பிற்கு காப் பஞ்சாயத்தே பொறுப்பு. சில கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகள் நுழையதடை விதித்திருப்பது சட்டவிரோதமானது. இதுபோன்ற பஞ்சாயத்துகளில் எந்த விவசாயியும் கலந்துகொள்ளக் கூடாது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் காப் பஞ்சாயத்துகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. இதில், இந்து, முஸ்லிம், சீக்கியர் மற்றும் கிறிஸ்தவ விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள். சில சமயம் இந்த காப் பஞ்சாயத்துகளின் முடிவுகள் சர்ச்சைகளை கிளப்புவது உண்டு.

வேளாண் சட்டங்களில் மத்தியஅரசு திருத்தம் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் சுரேஷ் கோத். இவரது தலைமையில்தான் டெல்லி எல்லைகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்றது. ஹரியாணா மற்றும் பஞ்சாப் விவசாயிகளால் சுரேஷ் கோத் மிகவும் மதிக்கப்படுகிறார். இவரது தலைமையில்தான் நேற்று முன்தினம் காப் பஞ்சாயத்து நடைபெற்றது.

காப் பஞ்சாயத்தை தொடர்ந்து ஹரியாணாவில் மீண்டும் மதநல்லிணக்கம் ஏற்படுத்த விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர்.

இதற்கிடையே மதக்கலவர வழக்குகளில் தேடப்பட்டு வந்த முன்பெட், ஷக்கூல் என்கிற 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று நூவில் கைது செய்யப்பட்டனர். மலைப் பகுதியில் மறைந்திருந்த இவர்கள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். இருவரையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர். இதில் காயமடைந்த இருவரும் நூ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 தனிப்படைகள் அமைப்பு: நூ மாவட்டத்தில் கடந்த பிப்ரவரியில் பசுக்களை கடத்தியதாக ராஜஸ்தானை சேர்ந்த ஜுனைத், நசீர் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தேடப்படும் மோனி மானேசர் மீது மதக் கலவரம் தொடர்பாக முக்கியப் புகார்கள் உள்ளன. எனவே அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.