EBM News Tamil
Leading News Portal in Tamil

மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவங்கள் – விசாரணையை விரைவில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு | Sexual violence incidents in Manipur – Supreme Court orders to complete the investigation soon and submit the report


புதுடெல்லி: ‘‘மற்றொரு இனத்தை சிறுமைபடுத்துவதற்காக, மணிப்பூர் கும்பல் பாலியல் வன்முறையை பயன்படுத்துகிறது, இதை தடுத்து நிறுத்த வேண்டியது மாநில அரசின் கடமை’’ என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை விரைவில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன் தினம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை முற்றிலும் ஏற்க முடியாது.

இது அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள மதிப்பு, கவுரவம், தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் மிக மோசமான செயல். வன்முறையில் ஈடுபடும் கும்பல் பல காரணங்களுக்காக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகிறது.

பெரும்பான்மை குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் குற்றங்களுக்கான தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் இதற்கு காரணம். இனக்கலவர சம்பவங்களில், மற்றொரு பிரிவை சிறுமைபடுத்துவதற்காக அந்த கும்பல் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறது. இது போன்ற அராஜகத்தை தடுத்து நிறுத்தி, பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் தலையாய கடமை.

இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை விரைவில் கைது செய்வது மிக முக்கியமானது. அப்போதுதான், இந்த விசாரணையை முடிக்க முடியும். குற்றவாளிகள் ஆதாரங்களை அளிக்கவும், தப்பி ஓடவும் முயற்சிக்கலாம். அதனால் கைது நடவடிக்கையில் தாமதம் கூடாது. வன்முறையை கட்டுப்படுத்துவதில் போலீஸார் அலட்சியமாக இருந்ததாக மக்கள்குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்.

வன்முறையை நிறுத்துவதற் கும், வன்முறையில் ஈடுபட்டவர் களுக்கு தண்டனை கிடைக்கவும், நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலை நாட்டவும், மூன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கீதா மித்தல், ஷாலினி பன்சல்கர் ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, மணிப்பூரில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும். மணிப்பூர் வன்முறை தொடர்பான சிபிஐ விசாரணையை முன்னாள் மகாராஷ்டிர டிஜிபி தத்தாத்ரே பட்சல்கிகர மேற்பார்வையிடுவார்.

இந்த விசாணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்க வேண்டும். விசாரணையின் முழு விவரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.