பாகிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டிக்கு பின் எல்லாம் முடிந்தது என்று கண்ணீர் சிந்தினேன் – சச்சின் உருக்கம்
பாகிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் அந்த போட்டிக்கு பின் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக நினைத்து கண்ணீர் சிந்தியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் உடனான தனது அறிமுக போட்டி குறித்து பேசி உள்ளார். முன்னாள் வீரர் நாஸீர் உசைன் உடனான கலந்துரையாடலில் “பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அறிமுகமானேன். அந்த அணியில் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் ஆகியோர் பந்துவீசினர்.
பாகிஸ்தான் வீரர்களின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நான் திணறினேன். அவர்கள் வீசிய பந்து எனது உடலை பதம் பார்த்தது. நான் பள்ளிக்கூட போட்டிகளில் விளையாடியது போல் ஆடினேன். 14 ரன்களில் நான் ஆட்டமிழந்து வெளியேறிய போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஏன் இப்படி விளையாடினேன் என்று எனக்கே தெரியவில்லை.
டிரெஸ்ஸிங் ரூம் சென்ற நான் சகவீரர்கள் யாரையும் பார்க்கமால் பாத்ரூம் சென்று எனது மோசமான ஆட்டத்தை நினைத்து கண்ணீர் சிந்தினேன். இந்தப் போட்டியுடன் எல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் என்னை அடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட அழைக்கமாட்டார்கள் என்று நினைத்து சோகத்தில் ஆழ்ந்தேன்.
நான் சோகத்தில் இருப்பதை புரிந்து கொண்டு அணியின் மூத்த வீரர் ரவி சாஸ்திரி ஆறுதல் கூறினார். நீ தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடுகிறாய் என்பதை நினவைில் வைத்துக்கொள். உன்னுடைய ஆட்டம் பள்ளிக்கூட போட்டி போல் இருந்தது. நீ களத்திற்கு சென்று அரைமணி நேரம் பொறுமையாக விளையாடு. அவர்களின் வேகம் உனக்கு பழகிவிடும். அதன்பின் விளையாட எளிதாக இருக்கும் என்று கூறினார். அவர் சொன்னது போல் நிதனமாக விளையாடி 59 ரன்கள் குவித்தேன்“ என்றார்.