அது என்னுடைய கடமை: உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்து நெகிழ வைத்த கவுதம் காம்பீர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அவர் வீட்டில் பணிபுரிந்துவந்த பெண் உயிரிழந்தநிலையில், இறுதிச் சடங்கு செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க எம்.பியுமான கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (வயது 49). இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரைச் சேர்ந்தவர். திருமணமான இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட சரஸ்வதி பத்ரா, கவுதம் கம்பீரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்குச் சென்றார்.
நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் 21-ம் தேதி உயிரிழந்தார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக உயிரிழந்த சரஸ்வதியின் உடலை அவரது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு கொண்டு செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது. அதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று சரஸ்வதியின் இறுதிச் சடங்கை கவுதம் கம்பீரை முன்னின்று செய்து உடலை நல்லடக்கமும் செய்தார்.
இதுகுறித்த செய்தி ஒடிசா நாளிதழில் வெளிவந்த நிலையில் அதனை கவுதம் காம்பீர் அவருடைய ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். என்னுடைய குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்பது வீட்டு உதவியாக இருக்க முடியாது. அவர் என்னுடைய குடும்பம். அவருடைய இறுதிச் சடங்கை செய்யவேண்டிய என்னுடைய கடமை. சாதி, மதம், சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்தை மட்டுமே எப்போதும் நம்புவதுதான் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘அதனையடுத்து, பலரும் கவுதம் காம்பீருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.