EBM News Tamil
Leading News Portal in Tamil

உலகக் கோப்பை முழுவதும் எலும்பு முறிந்த முழங்காலுடன் விளையாடினேன் – முகமது ஷமி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2015 உலகக் கோப்பை முழுவதும் எலும்பு முறிந்த முழங்காலுடன் விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த தொடர் முழுவதும் காயத்துடன் விளையாடியதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் உடனான இன்ஸ்டாகிராம் நேரலையில் ஷமி கூறியுள்ளார்.

இது குறித்து பேசுகையில், “உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே எனக்கு முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயத்தின் வலிக்காக மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை எடுத்து கொண்டேன். அரையிறுதி போட்டியில் என்னால் விளையாட முடியாது என்றேன். ஆனால் கேப்டன் தோனியும், அணி நிர்வாகமும் என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

அரையிறுதி போட்டியின் போது முதற்பாதிக்கு மேல் என்னால் பந்துவீச இயலவில்லை. வலி அதிகமாக உள்ளது என்று கேப்டன் தோனியிடம் கூறினேன். அவர் உன்னால் முடியுமென்று நம்பிக்கை கொடுத்தார். அதே நேரம் 60 ரன்களுக்கு மேல் கொடுத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதுபோன்ற சூழ்நிலையை நான் மீண்டும் இதுவரை சந்தித்தது இல்லை“ என்றார்.