EBM News Tamil
Leading News Portal in Tamil

எதுவும் செய்யாமலேயே கௌரவம்… 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்… கொரோனாவின் சாதனை

ஐதராபாத் : கடந்த 2019ல் நடத்தப்பட்ட உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடரில் கோப்பையை கைப்பற்றி இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை பிவி சிந்து பெற்றிருந்தார். இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் 2022க்கு ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடர் கடந்த 2006 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீராங்கனை பிவி சிந்து சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றார். இதன்மூலம் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கும் நாட்டிற்கும் கிடைத்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் டோக்கியோவில் நடத்தப்பட இருந்த ஒலிம்பிக் போட்டிகள், அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மற்ற போட்டிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பேட்மிண்டன் உலக கோப்பை தொடரும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடரும் ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 2022ம் ஆண்டிற்கு உலக பேட்மிண்டன் சாம்பியன் தொடர் தள்ளி போகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் விரும்பியோ விரும்பாமலே, பிவி சிந்து, வரும் 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து கைகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இந்த போட்டிகளை நடத்த அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் இல்லை என்று உலக பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.