இப்படி பண்ணிட்டியேடா கொரோனா.. கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்க முடியாம போச்சே!
சிட்னி : கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக எட்டு ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் எட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் – வீராங்கனைகளின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பது கிரிக்கெட் உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 60,000 பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது
அதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த முடியாத சூழலும் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் மக்கள் கூட்டமாக கூட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் திருமணத்தை ஏப்ரல் மாதத்தில் நிச்சயித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் இப்போது தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர். இரு வீரர்கள் நிச்சயம் செய்து கொண்டு, திருமண தேதியை முடிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள ஆடம் ஜாம்பா, டிஆர்சி ஷார்ட், ஜேக்சன் பேர்டு, ஆண்ட்ரூ டை ஆகியோரும், உள்ளூர் ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்வெப்சன், அலிஸ்டர் மெக்டேர்மாட் ஆகியோரும், உள்ளூர் அணிகளில் ஆடி வரும் வீராங்கனைகளான ஜெஸ் ஜோனாசன் மற்றும் கேட்லின் பிரயட் தான் அந்த வீரர்கள்.