அதெப்படி பெர்மிஷன் இல்லாமல் போய் மகனைப் பார்க்கலாம்.. போடெங்குக்கு ஃபைன்
முனிச்: பேயன் முனிச் வீரர் ஜெரோம் போடெங், உரிய அனுமதி இல்லாமல் நகரை விட்டு வெளியேறிச் சென்று, உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தனது மகனைப் பார்த்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவைரஸ் பரவல் காரணமாக யாரும் வெளியே போகக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி போடெங் போனதால் தற்போது அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இதுதொடர்பாக டிவிஓ டெலிவிஷன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 31 வயதான போடெங்கின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. ஒரு சாலை விபத்தில் அவர் லேசான காயமடைந்துள்ளார். இதையடுத்து மார்ச் 31ம் தேதி அவர் முனிச்சை விட்டு வெளியேறி போய் தனது மகனைப் பார்த்துள்ளார். இதுதொடர்பாக எந்த அனுமதியையும் அவர் பெறவில்லை.
இதையடுத்து போடெங் மீது பேயன் முனிச் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிளப்பின் அனுமதி இல்லாமல் போடெங் வெளியேறியுள்ளார். இது விதி மீறல் ஆகும். கிளப் விதித்துள்ள விதிமுறைகளை அவர் காற்றில் பறக்க விட்டுள்ளார். உரிய அனுமதி இல்லாமல் அவர் வெளியே போயுள்ளார். அரசின் உத்தரவுப்படி கிளப் தனது வீரர்களுக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அவர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்பது அதில் ஒரு உத்தரவு. உரிய அனுமதி இல்லாமல் எங்கும் போகக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் போடெங் அதை மீறியுள்ளார். எனவே அவருக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது என்று கிளப் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு அபராதத் தொகை என்பது தெரிவிக்கப்படவில்லை.