EBM News Tamil
Leading News Portal in Tamil

கங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே!

டெல்லி : இரண்டு நாட்களாக இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டி தோல்வி குறித்து கங்குலி பேசியதாகவும், இந்திய வீரர்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் கங்குலி அறிவுரை கூறுவதாகவும் பல செய்திகள் வந்தன.
அப்படியே உண்மையாக கங்குலியின் கருத்துக்கள் போலவே இருந்த அந்த செய்திகள் அனைத்தும், கங்குலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு என நம்பப்படும் ஒரு சமூக வலைத்தளப் பக்கத்தை அடிப்படையாக கொண்டு வந்தவை. ஆனால், தற்போது, அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு கங்குலியுடையது அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் தளத்தில் @sganguly99 என்ற பெயரில் ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கை ஐம்பத்தியைந்து ஆயிரம் மக்கள் வரை பின்தொடர்கிறார்கள். அதில் “எக்ஸ்-கேப்டன், இந்திய கிரிக்கெட் அணி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குலியின் புகைப்படங்கள் பலவும் பகிரப்பட்டுள்ளது. பார்க்க அப்படியே உண்மையான கங்குலியின் கணக்கு போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முதல் டெஸ்ட் தோல்விக்கு பின் பல முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அது போல, கங்குலியின் கருத்துக்கள் போலவே இந்த கணக்கில் அவர் புகைப்படத்தோடு, ஒரு பதிவு வெளிவந்தது. அந்த நீண்ட பதிவில், அனைவரும் ரன் குவித்தால் தான் டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியும், ரஹானே, முரளி விஜய் ஆகியோர் உறுதியோடு ஆட வேண்டும், வீரர்களை மாற்றும் முன்பு அணியில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என பல அறிவுரைகள் கூறப்பட்டு இருந்தன.
இரண்டு நாட்களாக இந்த பதிவின் சாராம்சத்தோடு உலகம் முழுவதும் செய்திகள் வலம் வந்தன. இதையடுத்து, கங்குலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “எனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு ஃபேக் கணக்கு. தயவுசெய்து அதில் இருந்து எந்த செய்தியையோ அல்லது மேற்கோள்களையோ எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்ஸ்டாகிராமிடம் இப்போதே புகார் செய்யவிருக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.