EBM News Tamil
Leading News Portal in Tamil

முதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்

லண்டன் : இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில், முதல் போட்டியில் கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால் விராட் கோஹ்லியை வீழ்த்தியிருப்பேன் என கருத்து தெரிவித்துள்ளார் ஆன்டர்சன்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் பிரகாசித்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி மட்டுமே. முதல் இன்னிங்க்ஸில் அவர் 149 ரன்கள் குவித்தாலும், இரண்டு முறை ஸ்லிப்பில் அவர் கொடுத்த கேட்ச்களை வீணடித்தார், இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன்.
இந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பு இருந்தே விராட் கோஹ்லி – ஆண்டர்சன் இடையேயான கள யுத்தம் பற்றிய பேச்சுக்கள் இருந்தன. ஆண்டர்சன் இது வரை ஐந்து முறை கோஹ்லியை வீழ்த்தி இருக்கிறார். எனவே, கோஹ்லி ஆண்டர்சனை தாக்குப்பிடித்து ஆடுவாரா? என்ற கேள்விகள் இருந்தன.
அடுத்த டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் பற்றிய தனது கருத்துக்களை கூறியுள்ளார். “அது மிகவும் உயர்ந்த விஷயம் (கோஹ்லியின் முதல் டெஸ்ட் பேட்டிங்). முதல் டெஸ்டில் அவருடனான யுத்தம் பிடித்திருந்தது. என்னுடைய திட்டங்கள் நன்றாக வேலை செய்தன. சில தவறிய வாய்ப்புகள் மற்றும் தவறவிடப்பட்ட ஒரு கேட்ச் ஆகியவை இல்லாவிட்டால், அவரை சில முறையாவது நான் வீழ்த்தி இருப்பேன். ஆனால், நடந்தது என்னவென்றால் நான் அவரை வீழ்த்தவில்லை. மேலும், அவர் சதம் மற்றும் அரைசதம் அடித்தார். அதனால், நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது அடுத்த போட்டியில், இன்னும் தீர்மானத்தோடு, உச்சகட்ட பார்மில் ஆட உதவும்” என கூறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில், ஆண்டர்சன் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸ்களில் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி, மொத்தம் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்க்ஸில் தான் வீசிய 22 ஓவர்களில் 7 மெய்டன் ஓவர்கள் வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.