EBM News Tamil
Leading News Portal in Tamil

அடேங்கப்பா ஐபிஎல் மதிப்பு 43,200 கோடி. சிஎஸ்கே 670 கோடி.. எல்லாம் உங்களால தான்!

மும்பை : ஐபிஎல் தொடரின் மதிப்பு மற்றும் அதில் பங்கேற்கும் அணியின் மதிப்புகள் குறித்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அதன் கணக்குகள் ஒவ்வொன்றும் ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கு மலைப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. முக்கியமாக ஐபிஎல் என்ற பிராண்டின் மதிப்பு 2018ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 43,200 கோடி) என தெரிய வந்துள்ளது.
சென்ற ஆண்டில் ஐபிஎல்-இன் மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் இருந்த நிலையில், தற்போது ஒரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஸ்டார் இந்தியா குழுமத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைதான் என தெரிய வந்துள்ளது.
ஸ்டார் இந்தியா குழுமம் ஒளிபரப்பு உரிமையை சுமார் 16,347 கோடி ரூபாய்க்கு பெற்று இருந்தது. ஒளிபரப்பு உரிமையை எந்த அளவுக்கு அதிகமாக பயன்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு பயன்படுத்தியது ஸ்டார் இந்தியா. ஐபிஎல் 2018, கிட்டத்தட்ட 17 சானல்களில், 8 மொழிகளில் ஒளிபரப்பட்டது. இணையத்தில் ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் தளம் மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இதன் காரணமாக 15 சதவீத அளவுக்கு பதிவுகள் (impressions) அதிகரித்துள்ளன. சென்ற ஆண்டு 1.2 பில்லியன் பதிவுகள் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 1.4 பில்லியன் பதிவுகள் கிடைத்துள்ளன.
சென்ற 2017ஆம் ஆண்டு சோனி நிறுவனம் ஒளிபரப்பிய போது விளம்பர வருமானமாக 1300 கோடி ஈட்டியது. இந்த ஆண்டு, ஸ்டார் இந்தியா 2000 கோடி விளம்பர வருமானம் ஈட்டி பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற எட்டு அணிகளின் பிராண்ட் மதிப்பும் அளவிடப்பட்டுள்ளது. அதன்படி (உத்தேசமாக) மும்பை இந்தியன்ஸ் 775 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 714 கோடி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் 672 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் 672 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 480 கோடி, டெல்லி டேர்டெவில்ஸ் 357 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் 357 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் 295 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மலைக்க வைக்கும் கோடிக்கணக்கான மதிப்புகளுக்கு பார்வையாளர்களாகிய நாமும் தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம்.