EBM News Tamil
Leading News Portal in Tamil

கை குலுக்கிக் கொண்ட ‘கிம்- ட்ரம்ப்’: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ருசிகரம்

பர்மிங்ஹாமில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், அங்கு, வட கொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபரின் முகமூடிகளை அணிந்து வந்தவர்கள் கைகுலுக்கிக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி இன்னும் வெற்றி பெற 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. களத்தில் விராட் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதனால், இந்தப் போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், எட்ஜ்பாஸ்டன் மைதானமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ரசிகர்களின் கூட்டம் நேற்றைய ஆட்டத்தில் இருந்தே அதிகரித்துக் காணப்பட்டது.
மூன்றாவது நாள் ஆட்டமான நேற்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இங்கிலாந்து பேட்டிங்கை ரசித்துக் கொண்டிருந்த தருணத்தில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போல ஒருவர் உடை அணிந்து, அவரின் முகமுடி அணிந்து கையில் ஏவுகணை பொம்மையை ஏந்தி நடந்து பார்வையாளர்கள் அமரும் இடத்துக்கு வந்தார். இவரைப் பார்த்தவுடன் ரசிகர்கள் கூட்டம் அனைத்தும் இவர் பக்கம் திரும்பியது.
உடனடியாக அங்குப் பாதுகாவலர்களும், போலீஸாரும் வந்தனர். ஆனால், ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மற்றொருவர் எழுந்து கிம் ஜாங் உன் முகமூடி அணிந்திருந்தவரை நோக்கி வந்தார். அவரைக் கண்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஏனென்றால், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முகமுடி அணிந்து கிம் ஜாங் முகமூடி அணிந்தவரை நோக்கி நடந்து வந்தார்.
இருவரும் அருகருகே வந்ததும், ஒருவொருக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொண்டதையடுத்து, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் ஆகியோர் சமீபத்தில் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். இந்தச் சந்திப்பு உலகநாடுகள் அனைத்திலும் கவனிக்கப்பட்டது. அதை உணர்த்தும் வகையில் இரு தலைவர்களின் முகமுடி அணிந்த இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். இதனால், ரசிகர்கள் மத்தியில் பெருத்த கரஒலியும், விசில் சத்தமும் எழுந்தது.