EBM News Tamil
Leading News Portal in Tamil

கோலியின் சதம் அற்புதம்; இந்தியாவால் இங்கிலாந்தை வீழ்த்த முடியாதா?-கிறிஸ் கெயில் பேட்டி

இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி அடித்த சதம், மிக அற்புதமானது. இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க கேப்டன் கோலி அடித்த சதம் மிகவும் அவசியமானது என்று மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றுக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் டெல்லி வந்துள்ளார். அப்போது ஹோட்டல் ஒன்றில் கெயில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ”நான் விராட் கோலியின் பேட்டிங்கை முழுமையாகப் பார்க்கவில்லை. ஆனால், அவரின் பேட்டிங் தொகுப்பு (ஹைலைட்ஸ்) மட்டுமே பார்த்தேன். ஆஹா, என்ன அற்புதமான சதம். இந்திய வீரர்கள் நம்பிக்கை இழந்திருக்கும் போது அவர்களை உத்வேகப்படுத்த, உற்சாகப்படுத்த இதுபோன்ற சதம் அவசியம். கோலியின் சதத்தைப் பார்த்த அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு அது நிச்சயம் உற்சாகம் தருவதாக அமையும்.
நடு வரிசையில் களமிறங்கி கடைசி வரை நின்று அணியை வழிநடத்திச் சென்ற விராட் கோலியின் பேட்டிங் சிறப்பானது. இந்த டெஸ்ட் தொடரை விராட் கோலி அணி அருமையாகத் தொடங்கி இருக்கிறது” என கிறிஸ் கெயில் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறதா? என நிருபர்கள் கெயிலிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், ”ஏன் இங்கிலாந்து அணியை இந்தியாவால் வெல்ல முடியாதா. அப்படி வெல்லமுடியாத அணியா? இங்கிலாந்து. அவர்களும் மனிதர்கள்தானே” என்றார்.
ஜோய் ரூட் அடித்த 80 ரன்கள், விராட் கோலியின் சதம் ஆகியவற்றை ஒப்பிடுங்கள் என்று நிருபர்கள், கெயிலிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், ”நான் ஜோய்ரூட்டின் 80 ரன்களைப் பார்க்கவில்லை. ஆனால், விராட் கோலியின் பேட்டிங்கின் தொகுப்பைப் பார்த்தேன். ஆனால், ஜோட் ரூட்டை ஆட்டமிழக்கச் செய்தபோது விராட் கோலியின் மைக் கீழே விழுந்த காட்சியையும் பார்த்தேன்.
என்னைப் பொறுத்தவரை நான் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு தயாராகிவிடுவேன் என நம்புகிறேன். நான் எனது அணியின் தேர்வாளர்கள், பயிற்சியாளர்களுடன் அமர்ந்து பேசி அவர்களின் திட்டத்தைக் கேட்பேன். உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு பின் ஓய்வு பெற்றுவிடுவேன் எனத் தெளிவாகக் கூறிவிட்டார், உங்களிடம் எந்தவிதமான வார்த்தையும் இல்லை என நிருபர்கள் கேட்டனர். அதற்கு கெயில் சிரித்துக்கொண்டே, ”நான் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என்பது எனது திட்டம். ஓய்வு குறித்து அதன்பின் பேசலாம்.
எங்கள் அணி உலகக்கோப்பையை இழக்கவிடமாட்டேன். கெயில் இருக்கிறேன், தைரியமாக இருங்கள் என்று அணித் தேர்வாளர்களிடம் கூறுவேன்” எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேற்கிந்தியத்தீவுகளில் நட்சத்திர வீரர்களாக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு கெயில் பதில் அளிக்கையில், ”மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தற்போது ஷிம்ரான் ஹெட்மேயர், ஷாய் ஹோப், எவின் லீவிஸ் ஆகியோர்தான் நட்சத்திர வீரர்களாக வருவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.