‘கிங்’, ‘தனிமனித ஹீரோ கோலி’: இங்கிலாந்து ஊடகங்கள் புகழாரம்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தையும், தனி மனிதராகக் களத்தில் நின்று அணியைக் காத்ததையும் இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.
குறிப்பாக இங்கிலாந்தில் வெளிவரும் நாளேடுகள் முகப்புப் பக்கத்தில் விராட் கோலியின் சதத்தைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியிடம் இழந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால், கேப்டன் பொறுப்பை உணர்ந்தும், கடந்த 2014-ம் ஆண்டு கால கசப்பானப் பேச்சுகளையும், விமர்சனங்களை உடைக்கும் வகையில் பேட் செய்த விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். சிறப்பாக பேட் செய்த விராட் கோலி 149 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
விராட் கோலியின் ஆர்ப்பரிப்பான சதத்தை இங்கிலாந்து ஊடகங்கள் பாராட்டிச் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட்.காம்.ஏயு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்தியா திருப்பி அடிக்கும் என்பதை கிங் கோலி நிரூபித்துவிட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தி கார்டியன் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், ”விராட் கோலி தனிமனித ஹீரோவாகக் களத்தில் நின்று மிகச்சிறந்த இன்னிங்ஸை அளித்துள்ளார். என்ன மாதிரியான மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளார்” எனப் புகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தில் வெளிவரும் புகழ்பெற்ற டெய்லிமெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில், ”டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறப்பான வெளிப்பாடு. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹெவிவெயிட் சாம்பியன் போட்டியில் இந்தியா சிறப்பான பஞ்ச் கொடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, ஒற்றை நபராக இருந்து தனது இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார். இது அவருக்கான நாளாகும்” எனத் தெரிவித்துள்ளது.
டெலிகிராப் நாளேடு வெளியிட்ட செய்தியில், ”சாம் கரன் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை கண்ணீர்விட வைத்தார். ஆனால், மாஸ்டராக மாறிய விராட் கோலி, சதம் அடித்து அணியைக் காத்துள்ளார்” என்று புகழ்ந்துள்ளது.
ஸ்டஃப் இணையதளம் வெளியிட்ட செய்தியில், ”எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மிகச்சிறந்த சதம் அடித்து இந்திய அணியைக் காத்துள்ளார் விராட் கோலி” என்று புகழ்ந்துள்ளது.