EBM News Tamil
Leading News Portal in Tamil

அஸ்வினின் 4 முக்கிய விக்கெட்டுகள், ஜோ ரூட்டைக் காலி செய்த கோலி: முடங்கிய இங்கிலாந்து

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அனைத்தையும் சரியாகச் செய்ய இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.
அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக விராட் கோலி, தைரியமாக புஜாராவை உட்கார வைத்து ராகுலை அவருக்குப் பதில் தேர்வு செய்துள்ளார். அதே போல் இந்திய தொடக்க வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா நன்றாக வீச உமேஷ் யாதவ் சொதப்பினார் இதனையடுத்து 7வது ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டு வந்தார். பிறகு ஜோ ரூட் அருமையாக ஆடி 80 ரன்களில் சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அருமையாக விராட் கோலி அவரை ரன் அவுட் செய்து ஆக்ரோஷம் காட்டினார். ஜோ ரூட்டின் 11வது தொடர் அரைசதம். மீண்டும் சதமாக மாற்ற முடியவில்லை.
பந்தை மிட்விக்கெட்டில் அடித்தார் ஜோ ரூட், பந்தை விரட்டியது விராட் கோலி சறுக்கிக் கொண்டு பந்தை பிடித்த விராட் கோலி ரன்னர் முனைக்கு அடித்தார், நேரடியாக ஸ்டம்பைத் தாக்கியது, அருமையான சமயோசிதம், துல்லியமான த்ரோ. அதன் பிறகு ஒருநாள் போட்டியில் வென்ற பிறகு சதமடித்த ஜோ ரூட் அன்று செய்ததைப் போலவே விராட் கோலியும் வாயில் கையை வைத்து உஷ் கூறிவிட்டு சில சென்சார் வார்த்தைகளை உதிர்த்தார். ஜோ ரூட் ஆட்டமிழக்கும் தறுவாயில் 216/3 என்று இருந்த இங்கிலாந்து 285/9 என்று சரிவு கண்டது. இந்த ரன் அவுட் ஜானி பேர்ஸ்டோ (70)வுக்கும் இவருக்கும் இடையிலான 104 ரன் கூட்டணியை உடைத்தது. பேர்ஸ்டோதான் 2வது ரன்னுக்கு அழைத்தார். தவறான அழைப்பு, நேர் த்ரோவாக இல்லாவிட்டாலும் கூட ஜோ ரூட் தேறியிருப்பது கடினம்.
அலிஸ்டர் குக் 13 ரன்களில் இருந்த போது அஸ்வின் பந்துகளை வாசிக்க முடியாமல் வீழ்ந்தார், காற்றில் உள்ளே வந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியே திரும்பி குக் மட்டையின் வெளிவிளிம்பைக் கடந்து ஸ்டம்புகளைட் தொந்தரவு செய்தது, ஆஃப் ஸ்பின்னர்களின் கனவுப்பந்து அது.
கீட்டன் ஜெனிங்ஸ் கொடுத்த ஸ்லிப் கேட்ச் நேராக கோலியிடம் செல்ல குறுக்கே டைவ் அடித்து ரஹானே கேட்சை விட க் காரணமாக அமைந்தார். குக் ஆட்டமிழந்த பிறகு ஜோ ரூட், ஜெனிங்ஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 72 ரன்களைச் சேர்த்தனர். 42 ரன்களில் இருந்த ஜெனிங்ஸ், ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசிய பந்தை தன் காலுக்குக் கீழேயே தடுத்து ஆடினார். பந்து ஸ்டம்புக்கு உருண்டு சென்று கில்லியைத் தட்டிவிட்டது.
டேவிட் மலான் 8 ரன்களில் இருந்த போது மொகமது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தில் பின் காலில் வாங்கினார். கொஞ்சம் மேலாகப் பட்டது போல் தெரிந்தது, நடுவர் கையை உயர்த்தினார், ரிவியூ கேட்டார் மலான் பலனில்லை. ஷமி 2வது விக்கெட்டை வீழ்த்த 112/3 என்று இங்கிலாந்து அல்லாடியது.
அப்போது ஜோ ரூட், அபாய வீரர் ஜானி பேர்ஸ்டோ இணைந்தனர். ஷமியின் பந்து வீச்சில் வேகம் குறைந்தது, அஸ்வின் பந்துகளை பேர்ஸ்டோ நன்றாக ஆடினார். ரூட்டும், பேர்ஸ்டோவும் இஷ்டத்துக்கு ரன்களை எடுக்கத் தொடங்கினர். கோலி தடுப்பு களவியூகம் அமைத்தும் பயனில்லை. பேர்ஸ்டோ 9 பவுண்டரிகளுடன் 88 பந்துகளில் 70 என்று அபாயகரமாகத் திகழ்ந்தார். ஜோ ரூட் 156 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து கோலியின் அபார நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, சிறிது நேரத்துக்கெல்லாம் ஜானி பேர்ஸ்டோ 70 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்தை பின்னால் சென்று நேர் மட்டையில் ஆடுவதற்குப் பதிலாக குறுக்கு மட்டை வீசினார் பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது.
அபாய வீரர் ஜோஸ் பட்லர் ரன் எடுப்பதற்கு முன்பே அஸ்வினின் நேர் பந்தை அக்ராசாக ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், இந்தப் பந்து அவ்வளவாகத் திரும்பவில்லை. பென் ஸ்டோக்ஸ் 21 ரன்கள் எடுத்து மெதுவே ஆடிக்கொண்டிருந்த போது மிடில் அண்ட் லெக்கில் வந்த அஸ்வின் பந்து ஒன்றை நன்றாக இவர் அடித்திருந்தால் பவுண்டரிக்குக் கூட சென்றிருக்கும் ஆனால் அரைகுறை மனதுடன் சற்றே கூடுதலாக எழும்பிய பந்தை என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோ செய்ய அது அஸ்வினிடமே கேட்ச் ஆனது. 216/3லிருந்து 243/7 என்று ஆனது, சாம் கரன் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க அடில் ரஷீத் 13 ரன்களில் இஷாந்தின் இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 1 ரன்னில் அஸ்வினின் ‘வேகப்பந்து’ வீச்சு போன்ற பந்துக்கு எல்.பி ஆகி வெளியேறினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் எடுக்காமல் களத்தில் உள்ளார்.
அஸ்வின் குக், ஸ்டோக்ஸ், பட்லர், பிராட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி 2 விக்கெட்டுகளையும் உமேஷ், இஷாந்த் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.