EBM News Tamil
Leading News Portal in Tamil

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி: இத்தாலியை 3-0 என வென்றது இந்தியா; கால் இறுதியில் அயர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் கால் இறுதியில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.
மகளிர் உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் நாக் அவுட் சுற்றில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 17-வது இடத்தில் உள்ள இத்தாலியுடன் நேற்று முன்தினம் இரவு மோதியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் 20-வது நிமிடத்தில் லால்ரெமிஷியாமி பீல்டு கோலும், 45-வது நிமிடத்தில் நேகா கோயல், 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா ஆகியோர் பெனால்டி கார்னர் வாய்ப்பிலும் கோல் அடித்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறியது. இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்துடன் மோதுகிறது. அயர்லாந்து அணி இந்தத் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரு
கிறது. லீக் சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த அந்த அணி அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. அதேவேளையில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்திடம் 1-0 என அயர்லாந்து தோல்வி கண்டிருந்தது.
இரு வெற்றிகளின் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அயர்லாந்து அணி கால் இறுதிக்கு தனது பிரிவில் இருந்து நேரடியாக தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் இந்திய அணி லீக் சுற்றில் இங்கிலாந்து, அமெரிக்க அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்த நிலையில், அயர்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. கோல்கள் வித்தியாசத்தால் லீக் சுற்றில் தனது பிரிவில் 3-வது இடம் பிடித்ததன் மூலம் நாக் அவுட் சுற்றில் விளையாடி கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
இந்திய அணி கடைசியாக உலகக் கோப்பை தொடரில் 1974-ம் ஆண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்திய அணி 4-வது இடம் பிடித்திருந்தது. தற்போதைய தொடரில் லீக் சுற்றில் கோல்கள் அடிப்பதில் தடுமாற்றம் கண்ட இந்திய அணி வீராங்கனைகள், நாக் அவுட் சுற்றில் அதற்கு தீர்வு கண்டுள்ளதன் மூலம் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். இதனால் 44 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியை அரை இறுதிக்கு கொண்டு செல்வதில் கேப்டன் ராணி ராம்பால் தீவிர முனைப்பு காட்டக்கூடும். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நள்ளிரவு 12.15 மணிக்கு நடைபெறுகிறது.