EBM News Tamil
Leading News Portal in Tamil

‘உ.கோப்பை 2வது போட்டியிலேயே அழுவதா?’ ‘கிளிகள்கூடப் பேசும்’-விமர்சகர்களுக்கு நெய்மர் பதிலடி

கோஸ்டா ரிகா அணிக்கு எதிராக 2-0 என்று பிரேஸில் வெற்றி பெற்றதில் 2வது கோலை அடித்தார் நெய்மர், பிறகு இறுதி விசில் அடித்தவுடன் முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழுதார், இது விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை வரவேற்றுள்ளது.
கோஸ்டா ரிகா 90 நிமிடங்கள் பிரேசிலைக் காயடித்தது, நெய்மர் கீழே விழுந்து கீழே விழுந்து பெனால்டி, ஃபவுல் வாங்க எவ்வளவோ முயற்சிகள் செய்ததும், ஓவர் ஆக்‌ஷனில் ஈடுபட்டதும் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது, முத்தாய்ப்பாக 2வது கோலை அடித்து ஏதோ உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்றது போல் உணர்ச்சிவயப்பட்டு தேம்பித் தேம்பி அழுததும் ரசிகர்கள் மத்தியில் கூட எடுபடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
நெய்மர் கீழே விழுந்தும், புரண்டும், நடுவர்களிடம் வாக்குவாதங்கள் புரிந்தும் கொஞ்சம் ஓவர் சீன் போட அமைதியாக தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கூட்டின்ஹோ, அவர்தான் முதல் கோலை அடித்தார். .
இந்நிலையில் விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக தன் ட்விட்டரில் நெய்மர் பதிவிட்டுள்ளதாவது:
இந்த இடத்துக்கு நான் வர நான் என்னவெல்லாம் கஷ்டப்பட்டேன், அனுபவித்தேன் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கிளிகள் கூடப் பேச முடியும், ஆனால் உண்மையான அந்த நிகழ்வில், தருணத்தில் வந்து, அதனை அனுபவித்துப் பார்த்தால்தான் என் உணர்வுகள் புரியும்,, ஆனால் பேசுவது எளிது செயல்புரிவது கடினம், எல்லோராலும் அதைச் செய்ய முடியாது.
நான் மகிழ்ச்சியில் அழுதேன், வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியும் ஆசையுமே நிறைவேறியதும் அழுகை வந்தது, மகிழ்ச்சியின் அழுகை அது.
என் வாழ்க்கையில் எதுவும் எளிதாக நடந்து விடவில்லை. இப்போது மட்டும் ஏன் எளிதாக இருக்க வேண்டும்? கனவு… இல்லையில்லை குறிக்கோள் இன்னும் உயிருடன் உள்ளது, அருமையாக ஆடிய அணிக்கு வாழ்த்துக்கள்.
உலகின் மிகவும் காஸ்ட்லியான வீரரான நெய்மர் பிப்ரவரியில் காயமடைந்த பிறகு 4வது முறையாக களம் காண்கிறார்.
பிரேசில் பயிற்சியாளர் டீட்டே கூறும்போது, “அவரது உயர்தரத்தை எட்டுவதற்கு சிறிது கால அவகாசம் தேவை, அதற்கு முன்பாக அவரை நம்பியிருக்க வேண்டியத் தேவையில்லாத வலுவான அணி அவசியம்” என்றார்.
பிரேசில் கடந்த உலகக்கோப்பையில் சொந்த மண்ணில் 7-1 என்று ஜெர்மனியிடம் வெளியேறியதிலிருந்தே அந்தத் தேசம் வெறியுடன் 4 ஆண்டுகள் காத்திருக்கிறது. எனவே முதல் போட்டி ட்ரா, 2வது போட்டி ஹை வோல்டேஜ் போட்டி, இதில் வெற்றி பெறும்போது உணர்ச்சிவயப்படுவது சகஜமே. பயிற்சியாளர் டீட்டே கொண்டாடும் போது அவரையும் கீழே தள்ளித்தான் கொண்டாடியது பிரேசில்
ஆனாலும் நெய்மரின் தேம்பித்தேம்பிய அழுகை சில நிபுணர்கள் வசம் வரவேற்பைப் பெறவில்லை. அவரது கண்ணீர் அவரால் கடினமான எதிரணியினருக்கு எதிராக அழுத்தங்களை எதிர்கொள்ளத் திராணியற்றவர் என்ற பிம்பத்தை உருவாக்குபவை என்று கருதப்படுகிறது.
பிரேஸிலின் மிகப்பெரிய செய்தித்தாள் ஓ’குளோபோ “உலகக்கோப்பையின் 2வது போட்டியிலேயே அழுவது இயல்பான ஒன்றல்ல. ஒரு பெரிய அணி மனோபலத்தைக் காட்ட வேண்டுமே தவிர பலவீனத்தை அல்ல, அவர் அழுதது உண்மையோ, நடிப்போ அழுவது கவலையளிக்கிறது” என்று எழுதியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே நெய்மர் ட்வீட்டரில் பதிலளித்துள்ளார்.