அவரவர்கள் வேலையைப் பார்ப்பது நல்லது: யோ-யோ-வில் தேர்ச்சி பெற்ற ரோஹித் சர்மா காட்டம்
பிசிசிஐ-யின் நவீன சர்ச்சைக்குரிய உடற்தகுதி சோதனையான யோ-யோ டெஸ்ட்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி பெற்று விட்டார், ஆனால் அவர் மீது சிலர் கடும் விமர்சனங்களை வைத்ததற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
யோ-யோ டெஸ்ட் சர்ச்சைப் பெரிதாக வெடிக்கும் முன் சிறிய அளவில் தீப்பொறிகளைக் கிளப்பி வருகிறது, ராயுடு, ஷமி, சஞ்சு சாம்சன் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை யோ-யோவினால் நழுவ விட்டதால் அணித்தேர்வு செய்து விட்டு என்ன யோ-யோ வேண்டிக்கிடக்கிறது என்ற தொனியில் விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு, பிசிசிஐ-யின் அதிகார மோதலில் சில வீரர்களை ஒழிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறதோ என்ற ரீதியில் மோசடியோ-யோ என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கச் செயலர் ஐயம் எழுப்பினார்.
இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு விலக்கு அளித்தது ஏன் என்றெல்லாம் கேள்விகளும் எழுந்தன, அவருக்கு விலக்கு அளிக்கவில்லை, எந்த வீரரும் எப்போது வேண்டுமானாலும் யோ-யோ டெஸ்ட்டில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சில ஊடகங்கள் ரோஹித் சர்மாவுக்கு 2வது வாய்ப்பு அளிக்கப்படும் என்றெல்லாம் யூகங்களை எழுதின.
இந்நிலையில் நேற்று ரோஹித் சர்மா யோ-யோவில் தேறியதையடுத்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகக் கூறியிருப்பதாவது:
“நான் எங்கு எப்படி என் நேரத்தைச் செலவழிக்கிறேன் என்பது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், அவரவர்கள் தங்கள் வேலையைப் பார்ப்பது நல்லது. வழிமுறைகளைப் பின்பற்றும்வரையில் நான் என் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்க உரிமை படைத்தவன்.
நாம் உண்மையான செய்திகளை விவாதிப்போம், சில சேனல்களுக்குக் கூறுகிறேன், யோ-யோ டெஸ்ட்டில் ஒரே வாய்ப்புதான் பெற்றேன், அது புதனன்று அதில் தேறிவிட்டேன். ஒரு செய்தியை வெளியிடும் முன் சரிபார்ப்பது எப்போதுமே நல்லது அல்லவா” என்று காட்டம் காட்டியுள்ளார்.