EBM News Tamil
Leading News Portal in Tamil

குரோஷியாவுடன் இன்று மோதல்: அர்ஜென்டினா அணியை கரைசேர்ப்பாரா மெஸ்ஸி?

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் குரோஷியாவுடன் இன்று அர்ஜென்டினா மோதவுள்ளது.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் டிரா செய்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே அர்ஜென்டினா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஐஸ்லாந்து அணிக்கு எதிராக அர்ஜென்டினா விளையாடிய விதம் குறித்து ஜாம்பவானான மாரடோனா கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையைப் போலவே இந்த ஆண்டிலும் முதல் சுற்றோடு அர்ஜென்டினா வெளியேறும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் ஆட்டத்தில் மெஸ்ஸி சிறப்பாக விளையாடவில்லை. பெனால்டி கிக்கையும் அவர் வீணாக்கினார். இதுவரை 11 முறை பெனல்டி கிக் வாய்ப்புகளை உலகக் கோப்பையில் மெஸ்ஸி வீணாக்கியுள்ளார். ஆனால் இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி சிறப்பாக செயல்படுவார் என்று அர்ஜென்டினாவின் ஸ்டிரைக்கர் பாலோ டைபாலா கூறினார். அவர் கூறும்போது, மெஸ்ஸிக்கு நாங்கள் இருக்கிறோம். அவருடைய பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். எங்களுடைய ஆதரவுடன் அவர் தனது முயற்சியில் வெற்றி பெறுவார்” என்றார்.
குரோஷியா முதல் ஆட்டத்தில் வென்றுள்ளதால் அந்த அணியும் தனது முன்னிலையைத் தக்கவைக்கப் போராடும். அதே நேரத்தில் முழுவதும் மெஸ்ஸியை நம்பி அர்ஜென்டினா களம் காண்கிறது.