மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடிவிட்டோம்: ஜெர்மனி பயிற்சியாளர் ஜோச்சிம் லோவ் வேதனை
உலகக் கோப்பை தொடரில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடிவிட்டோம் என ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோவ் தெரிவித்தார்.
ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள மெக்சிகோவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஜெர்மனியின் நடுகள ஆட்டம் மந்தமாக செயல்பட்டது. அதனை மெக்சிகோ சரியாக பயன்படுத்தியது. 35-வது நிமிடத்தில் சென்டர் பேக்கில் விளையாடிய ஜெர்மனியின் மேட்ஸ் ஹமெல்ஸ், மெக்சிகோ பகுதியில் தான் கொண்டு சென்ற பந்தை இழந்தார். அப்போது சேவியர் ஹெர்னாண்டஸ் மார்க் செய்யப்படாத நிலையில் வேகமாக பந்தை எடுத்து வந்து, ஜெரோம் போட்டெங்கை கடந்து லொசானோவிடம் துல்லியமாக பாஸை செய்தார்.
லொசானோ பந்தைக் கட்டுப்படுத்தி மெசுட் ஓஸில், டோனி குரூஸ் ஆகியோருக்கு அற்புதமாக போக்குக் காட்டி ஜெர்மனி கோல் கீப்பர் நியூயரைத் தாண்டி கோல் வலைக்குள் செலுத்தினார்.
இதுவே அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி ஆட்டத்தில் கொஞ்சம் ஆக்ரோஷம் கூடினாலும், மெக்சிகோ தனது தடுப்பு அரணை வலுப்படுத்தியதால் ஜெர்மனியை கோல் அடிக்கவிடவில்லை. 1986-ம் ஆண்டுக்குப் பிறகு ஜெர்மனி அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் தோற்றுள்ளது.
தோல்வி குறித்து ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோச்சிம் லோவ் கூறுகையில், “முதல் பாதியில் நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம். எங்களது வழக்கமான பாணியில் நாங்கள் விளையாட முடியாமல் போய்விட்டது. எங்களது தாக்குல் ஆட்டத்திறன் மற்றும் பந்தை கடத்தும் திறன் பயனுள்ளதாக இல்லை. அடுத்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும்” என்றார்.
முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த ஜெர்மனி அணி தனது எஃப் பிரிவில் தற்போதைக்கு கடைசி இடத்தில் உள்ளது. ஒருவேளை லீக் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்தால் நாக் அவுட் சுற்றில் பிரேசில் அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். ஜெர்மனி தனது 2-வது லீக் ஆட்டத்தில் 23-ம் தேதி சுவீடனை எதிர்கொள்கிறது.