EBM News Tamil
Leading News Portal in Tamil

ஸ்டீவன் ஸூபரின் சர்ச்சைக்குரிய கோலால் பிரேசில் – சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
ரஷ்யாவின் ரோஸ்டவ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் 4-3-3 என்ற பார்மட்டிலும், சுவிட்சர்லாந்து 4-2-3-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 3-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிளெரிம் ஸிமெய்லி பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி உதைத்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 11-வது நிமிடத்தில் பிரேலில் வீரர் பவுலின்ஹோ கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமான சென்று உதைத்த பந்து வலது புறம் விலகிச் சென்றது.
16-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி நெய்மர் உதைத்த பந்து, சுவிட்சர்லாந்து டிபன்டர்களால் தடுக்கப்பட்டது. 20-வது நிமிடத்தில் பிரேசில் அணி கோல் அடித்தது. நெய்மர் தன்னிடம் வந்த பந்தை மார்செலோவுக்கு தட்டி விட அவரது கிராஸ் சுவிட்சர்லாந்தின் ஸ்யூபரால் இடைமறிக்கப்பட்டது. இதனால் பந்து பாக்ஸ் பகுதிக்கு வெளியே வலது ஓரத்தில் இருந்த பிலிப் கோடின்ஹோவுக்கு செல்ல அவர், தனது வலது காலால் வலுவான ஷாட் மூலம் கோலுக்குள் செலுத்தினார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
நெய்மர் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்துச் செல்லும்போதெல்லாம் சுவிட்சர்லாந்து வீரர்கள் அவரை குறிவைத்து ஃபவுல் செய்தனர். குறிப்பாக இந்த வேலையை சுவிட்சர்லாந்தின் ஸ்டீபன் லிட்ச்ஸ்டெய்னர், ஸ்கார், பெஹ்ராமி ஆகியோர் மேற்கொண்டனர். சுமார் 10 முறை இவர்கள் நெய்மரை பவுல் செய்தனர். நெய்மரின் ஆடைகளை பிடித்து இழுப்பது, அவரது கால்களை இடைமறிப்பது, முகத்தை பிடித்து இழுப்பது என ஒட்டுமொத்தமாக நெய்மரை செயல்படவிடாமல் கட்டுக்குள் வைக்க முயன்றனர். இதற்காக சுவிட்சர்லாந்து வீரர்கள் சிலர் அதிகபட்சமாக மஞ்சள் அட்டை மட்டுமே பெற்றனர்.
33-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து நெய்மரின் கிராஸை பெற்ற கேப்ரியல் ஜீசஸ் 6 அடி தூரத்தில் இருந்து துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு வெளியே இடது புறம் விலகிச் சென்றது. இதேபோல் 45-வது நிமிடத்தில் நெய்மரிடம் இருந்து கிராஸை பெற்ற தியாகோ சில்வா கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமான சூழ்நிலையில் பந்தை தலையால் முட்டினார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. முதல் பாதியின் முடிவில் பிரேசில் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி சர்ச்சைக்குரிய முறையில் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. கார்னரில் இருந்து ஹெர்டான் ஷகிரியின் கிராஸை பெற்ற ஸ்டீவன் ஸூபர், கோல்கம்பத்தின் மையப்பகுதியில் துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். ஸூபரின் இந்த கோலை அனுமதிக்கக் கூடாது என்று பிரேசில் வாதிட்டது. அவரை மார்க் செய்வதற்காக நின்ற மிராண்டாவைத் தள்ளி விட்டதாக குற்றம்சாட்டினர், ஆனால் ரெப்ரீ சீசர் ரேமோஸ் அதற்கு செவிசாய்க்கவில்லை.
அந்தத் சமயத்தில் சிறு போராட்டம் இருந்தது உண்மைதான். ஆனாலும் மிராண்டாவைத் தள்ளிவிடும் அளவுக்கான போராட்டம் இல்லை. மிராண்டா பந்தைத் தவறவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ஷாகிரியின் கார்னரை சரியாகக் கணிக்காமல்தான் மார்க் செய்ய வேண்டிய ஸூபரை மிராண்டா கோட்டை விட்டதாகவே கருதப்பபட்டது. ஸூபரின் கோலால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதன் பின்னர் 57-வது நிமிடத்தில் கோடின்ஹோவின் கோல் அடிக்கும் இரு முயற்சிகள் தடுக்கப்பட்டன. அடுத்த நிமிடத்தில் நெய்மரின் கோல் அடிக்கும் முயற்சிக்கும் சுவிட்சலாந்து டிபன்டர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.
தியாகோ சில்வா, காஸ்மிரோ, பெர்னான்டின்ஹோ, வில்லியன், கோடின்ஹோ ஆகியோர் சுவிட்சர்லாந்து எல்லைக்குள் கடும் தொல்லை கொடுத்தனர். ஆனால் அவர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 74-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸை கைகளால் வளைத்து சுவிஸ் வீரர் மனுவெல் அகாஞ்ஜி, பவுல் செய்தார். இதனால் கேப்ரியல் ஜீசஸ் கீழே விழ பெனால்டி முறையிடப்பட்டது. ஆனால் நடுவர் அதை கண்டுகொள்ளவில்லை. 78-வது நிமிடத்தில் மார்செலோவிடம் இருந்து பந்தை பெற்ற நெய்மர், பாக்ஸின் வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்த பந்து கோல்கம்பத்தின் இடது ஓரத்தில் தடுக்கப்பட்டது.
அடுத்த 10-வது நிமிடத்தில் வில்லியனிடம் இருந்து கிராஸை பெற்ற நெய்மர் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் செலுத்த முயன்றார். ஆனால் அவரது முயற்சியை கோல்கீப்பர் யான் சோமர் முறியடித்தார். இதன் பின்னர் கடைசி கட்ட நிமிடங்களில் ரோபர்ட்டோ பிர்மினோ, மிராண்டா, ரெனேட்டா அகுஸ்டோ ஆகியோரது கோல் அடிக்கும் முயற்சிகளும் வீணானது. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.
திருப்தியில்லை
பிரேசில் பயிற்சியாளர் டைட் கூறும்போது, “இந்த ஆட்டத்தின் முடிவால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் வெற்றியை விரும்பினோம். ஆட்டத்தை சிறப்பாக முடிக்க வாய்ப்புகள் இருந்த போதிலும் பின்தங்கிவிட்டோம். சில வாய்ப்புகள் தெளிவாக இருந்தது. ஆனால் துல்லியமாக செயல்பட தவறிவிட்டோம்” என்றார்.
இப்போது பிரேசில்
உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளவையாக கருதப்படும் சில அணிகள் தங்களது முதல் ஆட்டத்தை இம்முறை வெற்றியுடன் தொடங்கவில்லை. ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் தங்களது முதல் ஆட்டத்தை டிரா செய்த நிலையில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, மெக்சிகோவிடம் வீழ்ந்தது. இந்த வரிசையில் தற்போது பிரேசில் அணி முதல் ஆட்டத்தை டிராவில் முடித்துள்ளது.