EBM News Tamil
Leading News Portal in Tamil

அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய மெக்சிகோ: 33 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது

உலகக்கோப்பைக் கால்பந்து ஞாயிறன்று நடந்த போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 33 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஜெர்மனியை வெற்றி கொண்டது மெக்சிகோ.
ஏகப்பட்ட அரைவாய்ப்புகளை கோலாக மாற்ற முடியாமல் தவித்த மெக்சிகோ லோசானோவின் கோல் மூலம் ஜெர்மனி முகாமில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தோல்விக்கு முன்னதாக 8 உலகக்கோப்பைப் போட்டிகளில் தோற்காமல் ஆடிவந்த ஜெர்மனி தோற்க நேரிட்டது.
1982க்குப் பிறகு ஜெர்மனி உலகக்கோப்பை முதல் போட்டியைத் தோற்றுள்ளது.
மெக்சிகோவின் அனுபவ வீர்ரும் ஸ்டாருமான ஹெர்னாண்டஸ் மிகப் பிரமாதமாக ஆடினார். அன்று ஸ்பெயினுக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனிமனிதனாகப் போராடியது பலருக்கும் உத்வேகமூட்டியுள்ளது போலும்!
2006-ல் ஜோக்கிம் லோ பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்தத பிறகே எந்த ஒரு முக்கிய, பெரிய கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதே ஜெர்மனியின் வழக்கம். ஆனால் நேற்று பந்துடைமை (Ball possession), இலக்கு நோக்கி அடித்தல் கோலுக்கான முனைப்புகள் பாஸ் துல்லியம் என்று ஜெர்மனி மெக்சிகோவைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கடைசியில் பினிஷிங், கோல்தானே வெற்றி பெறச்செய்யும், இதில் சோடை போனது ஜெர்மனி.
அச்சமூட்டக்கூடிய ஜெர்மனியின் நடுக்கள ஆட்டம் நேற்று மந்தமாக, அதனை மெக்சிகோ அற்புதமாகப் பயன்படுத்தியது. ஜெர்மனியின் செண்டர் பேக் மேட்ஸ் ஹமெல்ஸ் மெக்சிகோ பகுதியில் தான் கொண்டு சென்ற பந்தை இழந்தார், ஜேவியர் ஹெர்னாண்டசும் மார்க் செய்யப்படவில்லை என்பதால் அவர் வேகமாக பந்தை எடுத்து வந்தார் அவருக்கு நெருக்கமாக வந்த ஜெர்மனியின் ஜெரோம் போட்டெங்க்கை முந்தினார். பிறகு லொசானோவிடம் ஒரு துல்லியப் பாஸை மேற்கொள்ள லொசானோ பந்தைக் கட்டுப்படுத்தி மெசுட் ஓஸிலைக் கடைந்து கடந்து எதிர்கொண்ட டோனி குரூஸுக்கும் போக்குக் காட்டி ஜெர்மனி கோல் கீப்பர் மெனுயெல் நியூயரைத் தாண்டி கோல்வலைக்குள் செலுத்தினார்.
2வது பாதியில் ஜெர்மனி கொஞ்சம் வேகம் கூட்டினர், நெருக்கடியை அதிகரித்தனர். ஆனால் கோல்வலை சிக்கவில்லை. காரணம் ஒசாரியோ தடுப்பணையை வலுப்படுத்தினார். கோல் அடித்த லொசானோவை திரும்ப அழைத்து 39 வயது அனுபவசாலியும் 5 உலகக்கோப்பையில் ஆடிய 3வது வீரருமான ரஃபேல் மார்க்வேஸை இறக்க, ஜெர்மனியின் ஜோக்கி லோ, மார்கோ ரியூஸை இறக்கி சமி கேதிராவை ஓய்வறை திரும்ப அழைத்தார்.
ஆட்டம் தொடங்கி 14வது நிமிடத்திலேயே ஹெக்டர் மொரீனோ ஃப்ரீ கிக் ஒன்றை தலையால் முட்ட ஜெர்மன் கோல் கீப்பருக்கு அருகில் பந்து கோல் வலைக்குள் செல்லாமல் தப்பியது. ஜெர்மனியின் மூத்த வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று கொடுக்கப்பட்ட இடம் கேள்விக்குரியதானது. அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாகும் அளவுக்கு எங்கோ நின்று கொண்டிருந்தார்.
ஜெர்மனி நடுக்களம் சோபையிழக்க மெக்சிகோவின் மூவர் கூட்டணியான வெலா, ஹெர்னாண்டஸ், லொசானோ மாறிமாறி அருமையாக வேகம் காட்டினர். மூன்று முறை மெக்சிகோவின் எதிர்த்தாக்குதல் அதிர்ஷ்டவசமாக கோலாக மாறவில்லை. அப்போதுதா 35 நிமிடங்கள் கழித்து லொசானோவின் கோல் வந்தது.
இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி ஆட்டத்தில் கொஞ்சம் ஆக்ரோஷம் கூடினாலும் மெக்சிகோ தடுப்பணையை வலுப்படுத்தியது. தங்கள் பெனால்டி பகுதியில் 5 தடுப்பாட்ட வீரர்களை நிறுத்தி மெக்சிகோ ஜெர்மனிக்கு கோலை மறுத்தது.
ஜெர்மனி தன் ஷாட்களின் கோணங்களை மாற்றியது, வைடாகச் சென்று இடைவெளி கிடைக்கிறதா என்று பார்த்தனர், ஓஸில் என்ற பயனற்ற வீரரை வைத்துக் கொண்டு இலக்கை எளிதாகக் கண்டுகொள்ளும் மரியோ கோம்ஸ் என்பவரை கடைசி 11 நிமிடங்களில் இறக்கியது, ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, பரபரப்பான வெற்றியை மெக்சிகோ ஈட்டியது.