EBM News Tamil
Leading News Portal in Tamil

48 வருடங்களுக்கு பின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி: எகிப்து அணியை வீழ்த்தியது உருகுவே- கடைசி நேரத்தில் கோல் அடித்து கிமென்ஸ் அசத்தல்

உலகக் கோப்பை தொடரில் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது.
ரஷ்யாவின் யேகேத்ரின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எகிப்து அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும், உருகுவே அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கியது. காயத்தில் இருந்து குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா களமிறக்கப்படவில்லை. அந்த அணி 28 வருடங்களுக்கு பிறகு களமிறங்கியதால் ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பு இருந்தது.
8-வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரரான எடிசன் கவானி இலக்கை நோக்கி அடித்த வலுவில்லாத ஷாட்டை கோல்கீப்பரான எல்-ஷெனாய் தடுத்து நிறுத்தினார். 16-வது நிமிடத்தில் எகிப்து அணிக்கு பிரி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை கோல் விழவிடாமல் உருகுவே அணி தடுத்தது. 23-வது நிமிடத்தில் கவானிக்கு மீண்டும் ஒரு முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எகிப்து அணியின் டிபன்ஸ் அதை முறியடித்தது.
அடுத்த நிமிடத்தில் உருகுவே அணிக்கு கோல் அடிக்க மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இம்முறை லூயிஸ் சுவாரெஸ் அடித்த பந்து கோல்கம்பத்தின் பக்க வாட்டு பகுதியை தாக்கி ஏமாற்றம் அளித்தது. 32-வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு பிரி கிக் வாய்ப்பு கிடைத்தது. 30 அடி தூரத்தில் இருந்து சுவாரெஸ் உதைத்த பந்து மீண்டும் ஏமாற்றம் கொடுத்தது. முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் எகிப்து அணி அச்சுறுத்தல் கொடுத்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி இருந்தது.
46-வது நிமிடத்தில் சுவாரெஸ் முன்னேறிச் சென்று கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு கோல்கீப்பர் எல் ஷெனாய் முட்டுக்கட்டை போட்டார். இதன் பின்னர் இரு அணிகளும் தலா இரு பதிலி வீரர்களை களமிறக்கியது. 64-வது நிமிடத்தில் பாக்ஸின் இடது புறத்தில் இருந்து பந்தை பெற்ற சுவாரெஸ் அதை கிராஸ் செய்ய முயன்றார். ஆனால் அது எதிரணியினரால் தடுக்கப்பட்டது.
69-வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு கார்னர் கிடைத்தது. ஆனால் எடிசன் கவானி அடித்த இந்த பந்தை எகிப்து அணியின் டிபன்ஸால் தடுக்கப்பட்டது. 81-வது நிமிடத்தில் எகிப்து வீரர் முகமது எல்னே இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் மேல் நோக்கி சென்று ஏமாற்றம் அளித்தது. 83-வது நிமிடத்தில் உருகுவேயின் எடிசன் கவானி, பாக்ஸ் பகுதிக்கு வெளியில் இருந்து வலுவாக அடித்த பந்தை கோல்கீப்பர் எல்-ஷெனாய் அற்புதமாக தடுத்தார். 88-வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு பிரி கிக் வாய்ப்பு கிடைத்தது.
பாக்ஸ் பகுதிக்கு வெளியில் இருந்து எடிசன் கவானி உதைத்த பந்தானது கோல் கம்பத்தின் மீது பட்டு விலகிச் சென்றது. ஆட்டம் டிராவில் முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 89-வது நிமிடத்தில் கிடைத்த பிரி கிக்கில் உருகுவேயின் சான்செஸ் வலது ஓரத்தில் இருந்து உதைத்த பந்தை, எகிப்து அணியின் தற்காப்பு வீரர்களின் ஊடாக துள்ளியவாறு சென்று தலையால் முட்டி கோலாக மாற்றினார் ஜோஸ் கிமென்ஸ். இதுவே உருகுவே அணியின் வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 48 வருடங்களுக்கு பிறகு உருகுவே அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.