ஐஸ்லாந்துடன் இன்று மோதல்: மேஜிக் காட்டும் முனைப்பில் மெஸ்ஸி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு ஸ்டார்டக் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் மோதுகிறது.
இரு முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி சமீபகால மோசமான பார்ம், முக்கிய வீரர்கள் காயம் மற்றும் சர்ச்சைகளின் ஊடாக ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் களமிறங்குகிறது. அந்த அணியின் பலமே கேப்டன் லயோனல் மெஸ்ஸிதான். இம்முறை எப்படியாவது தனது நாட்டுக்காக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதில் மெஸ்ஸி தீவிர முனைப்புடன் உள்ளார். உலகக் கோப்பை வெற்றியாளராக பதக்கத்தை முத்தமிடுவதற்கான வேட்டையை, கத்துக்குட்டி நாடான ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார் மெஸ்ஸி.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடமும், அதைத் தொடர்ந்து 2015 மற்றும் 2016-ம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிகளில் சிலி அணியிடமும் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டிருந்தது. தொடர்ச்சியாக 3 பெரிய தொடர்களில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்ததால் மனம் உடைந்த மெஸ்ஸி 2016-ம் ஆண்டில் ஓய்வு முடிவை அறிவித்தார். சில மாதங்கள் உருண்டோடிய நிலையில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற அவர் மீண்டும் அர்ஜென்டினா அணியின் தேசிய உடையை அணிந்தார்.
தொழில்முறை போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக பல்வேறு சாதனைகள் படைத்துள்ள மெஸ்ஸி, 5 முறை ஃபிபாவின் சிறந்த வீரர் விருதையும் வென்றுள்ளார். அனைத்து கால சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்பட்டாலும் தனது தேசிய அணிக்காக பெரிய அளவிலான தொடர்களில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததில்லை என்ற மனக்குறை மெஸ்ஸிக்கும் கடந்த 10 ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ரஷ்யாவில் கால்பதித்ததுமே மெஸ்ஸி கூறிய வார்த்தைகள், “இந்த உலகக் கோப்பைதான் எனது எதிர்கால சர்வதேச கால்பந்து வாழ்க்கையை தீர்மானிக்கும்” என்பதுதான். இவை அவரது மனதின் வலியாகவே கருதப்படுகிறது.
தகுதி சுற்றில் ஈக்வேடார் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் அர்ஜென்டினா அணி முதலிலேயே கோல் வாங்கியது. பின் தங்கிய நிலையில் இருந்த போதிலும் சற்றும் தளராத மெஸ்ஸி தனது மேஜிக்கால் ஹாட்ரிக் கோல் அடித்து ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு அர்ஜென்டினா அணியை தகுதி பெறவைத்தார். இதன் பின்னர் நட்பு ரீதியிலான ஆட்டங்களில் அர்ஜென்டினா அணி விளையாடியது.
இதில் நைஜீரியாவுக்கு எதிராக 4-2 என்ற கோல் கணக்கிலும், ஸ்பெயின் அணிக்கு எதிராக 6-1 என்ற கோல் கணக்கிலும் அவமானகரமான வகையில் தோல்வியை சந்தித்தது. இந்த இரு ஆட்டத்திலும் காயம் காரணமாக மெஸ்ஸி பங்கேற்கவில்லை. மேலும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அர்ஜென்டினா அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தை இஸ்ரேல் அணிக்கு எதிராக ஜெருசலம் நகரில் விளையாட இருந்தது.
ஆனால் பாலஸ்தீனியர்களின் போராட்டம் காரணமாக கடைசி நேரத்தில் அர்ஜென்டினா அணி பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது. இதற்கிடையே முதன்மை கோல்கீப்பரான செர்ஜியோ ரோமெரோ, நடுகள வீரரான மனுவேல் லான்ஸினி ஆகியோர் திடீரென காயம் அடைந்துள்ளனர். அனேகமாக இன்றைய ஆட்டத்தில் மாற்று கோல் கீப்பரான நஹுவல் குஸ்மான் களமிறக்கப்படக்கூடும். மெஸ்ஸிக்கு உறுதுணையாக செர்ஜியோ அகுரோ, பாவ்லோ டைபலா, கோன்ஸாலோ ஹிகுயன் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், மெஸ்ஸியின் கனவு இம்முறையாவது மெய்படக்கூடும்.
இதுஒருபுறம் இருக்க வெறும் 3,30,000 மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து அணி தனது தொடக்க ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சந்திக்கிறது. குறுகிய அளவிலான மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் திறமையில் அந்த அணி சளைத்தது இல்லை. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி கால்பந்து உலகுக்கே அதிர்ச்சி கொடுத்திருந்தது ஐஸ்லாந்து அணி. அதற்கு முன்னதாக லீக் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிராவும் செய்திருந்தது.
அந்த ஆட்டத்தில் ரொனால்டோவை சிறப்பாக ஐஸ்லாந்து வீரர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் அந்த அணி வீரர்களால் மெஸ்ஸியை கட்டுப்படுத்துவது என்பது கடினமான விஷயம்தான். தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஐஸ்லாந்து தகுதி சுற்றில் குரோஷியா, உக்ரைன், துருக்கி ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது. இதனால் இன்றைய ஆட்டம் சற்று நெருக்கமான மோதலாகவே இருக்கக்கூடும்.
ஐஸ்லாந்து அணி வீரர் ஜோஹான் பெர்க் குட்மண்ட்சன் கூறும்போது “நாங்கள் ரொனால்டோவை அன்று அமைதியாக்கினோம். மெஸ்ஸி-க்கும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். மெஸ்சி இருக்கும் போது தடுப்பாட்டம் வலுவாக இருக்க வேண்டும்” என்றார்.