பாலோ குயர்ரெரோ வருகையால் பலம் பெறுமா பெரு அணி?- டென்மார்க்குடன் இன்று பலப்பரீட்சை
உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 9.30 மணிக்கு சரண்ஸ்க் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள பெரு – டென்மார்க் அணிகள் மோதுகின்றன.
பெரு அணி 36 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டனும், முன்கள வீரருமான 34 வயதான பாலோ குயர்ரெரோ, தடை நீக்கத்துக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. தகுதி சுற்றில் கடந்த அக்டோபர் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் குயர்ரெரோவுக்கு 14 மாதங்கள் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர், இருமுறை மேல்முறையீடு செய்த போதிலும் அதற்கு பலன் இல்லாமல் போனது. கடைசியாக அவர், சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தை நாடிய போது, தடை நீக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இருவார காலங்கள் இருந்த நிலையில்தான் குயர்ரெரோவின் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மற்றொரு மூத்த வீரரான ஜெஃபர்சன் பார்பானும் அணிக்கு பலம் சேர்ப்பவராக உள்ளார்.
பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்திலும், நியூஸிலாந்துக்கு எதிரான பிளே ஆஃப் சுற்றிலும் அவர், அடித்த கோல்கள் தான் 36 வருடங்களுக்குப் பிறகு பெரு அணி உலகக் கோப்பையில் கால்பதிக்க உதவியது. தடை நீக்கத்துக்குப் பிறகு அணிக்கு திரும்பிய பாலோ குயர்ரெரோ, சவுதி அரேபியா அணிக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்து அசத்தினார். டிபன்டரான ஆன்டர்சன் சான்டமரியா, விங்கர் எடிசன் பிளோரர்ஸ் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இதில் எடிசன் பிளோரர்ஸ், தகுதி சுற்று ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்திருந்தார்.
டென்மார்க் அணியானது நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் எரிக்சனை பெரிதும் நம்பி உள்ளது. 26 வயதான அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான பிளே ஆஃப் ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து மிரளச் செய்திருந்தார். மேலும் மெக்சிகோ அணிக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதிலும் எரிக்சன் முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். தகுதி சுற்று ஆட்டங்களில் மட்டும் எரிக்சன் 11 கோல்கள் அடித்திருந்தார். இது கிறிஸ்டியானோ ரொனால்டோ, ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஆகியோரது பங்களிப்புகளைவிட விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.
எரிக்சனுடன் சைமன் கஜெர், ஆன்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன், காஸ்பர் டோல்பெர்க், நிகோலாய் ஜோர்கன்சன் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். இதில் சைமன் கஜெர், ஆன்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் ஆகிய இருவரும் குயர்ரெரோ, ஜெஃபர்சன் பார்பான் ஆகியோரை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றக்கூடும்.
பிரான்ஸ் – ஆஸி. மோதல்
முன்னதாக கஸான் நகரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடு கிறது.