EBM News Tamil
Leading News Portal in Tamil

தவண் அதிரடி, விஜய் நிதான சதங்களுக்குப் பிறகு ஆப்கான் மீண்டெழுந்தனர்: இந்தியா 347/6

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஷிகர் தவணின் உணவு இடைவேளைக்கு முன்னாலான சாதனை சதம், முரளி விஜய்யின் நிதானமான அற்புத சதங்களினால் முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்துள்ளது.
ஒரு விதத்தில் ஷிகர் தவண், முரளி விஜய் சதங்களுக்குப் பிறகே ஆப்கான் அணியினர் மீண்டெழுந்தனர் என்றே கூற வேண்டும் 280/1 என்று வலுவாக இருந்த இந்திய அணி அஹமதிஸாய், ரஷித்கான், மொகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு விக்கெட்டுகளைக் கொடுத்து அடுத்த 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துள்ளது.
ஷிகர் தவண் அனாயாச மட்டைச் சுழற்றலில் 96 பந்துகளில் 19 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 107 ரன்கள் எடுக்க, முரளி விஜய் 153 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தார், இருவரும் சேர்ந்து 28.4 ஓவர்களில் 168 ரன்களை விளாசினர்.
ஆனால் கடைசி செஷனில் 99 ரன்களை எடுக்க 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. கடைசி செஷனில் ஆப்கன் வீரர்கள் உத்வேகத்துடன் பவுலிங் செய்தனர், பீல்டிங்கும் உறுதுணையாக அமைந்தது.
முரளி விஜய்யும், நன்றாக ஆடிய கே.எல்.ராகுலும் (64 பந்துகளில் 54 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் யமீன் அகமட்சாய் (2/32), வஃபாதார் (1/53) ஆகியோரின் கடின உழைப்புக்கு பரிசு கிடைத்தது. விஜய்-ராகுல் கூட்டணி 112 ரன்கள் சேர்த்தது, இருவரும் ஆட்டமிழந்தது ஒரு சிறிய சரிவை ஏற்படுத்தியது.
அஜிங்கிய ரஹானே 45 பந்துகளில் 10 ரன்கள் என்று சரியாக ஆடாமல் சொதப்பி ரஷீத் கான் பந்து லெக் பிரேக் ஒன்று ரஹானேவின் மட்டையைக் கடந்து பின்பேடைத் தாக்க கடும் முறையீடு எழுந்தது, பந்து மட்டையில் பட்டிருந்தால் அது ஸ்லிப் கேட்ச், ஆனால் மட்டையில் படவில்லை. களநடுவர் நாட் அவுட் கூற ஆப்கான் ரிவியூ செய்தது. அவுட். பந்து சறுக்கிக் கொண்டு வந்தது இதனை பிளிக் ஆடும் தெனாவட்டினால் ரஹானே எல்.பி.ஆகி வெளியேறினார்
புஜாரா 52 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து புஜாரா முஜீப் ஓவரில் தட்டுத்தடுமாறினார், ஒரு பந்தை நன்றாகத் தூக்கி வீசி புஜாராவை முன்னால் வரவழைத்து பந்தைச் சீண்ட தூண்டில் போட்டார் புஜாரா இசைந்தார் பந்து திரும்பி மட்டையின் உள்விளிம்பில் பட்டு லெக் கல்லியில் நபி டைவ் அடித்துக் கேட்ச் பிடித்தார், இதற்கு முந்தைய ஓவரில்தான் ஒரு கேட்சை இவர் விட்டிருந்தார், அதற்கு விமோசனம் தேடிக்கொண்டார். தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் கவர் பாயிண்ட் திசையில் தட்டி விட்டு தடதடவென ஓடினார், பாண்டியா வரவில்லை, கபடி ஆட்டத்தில் மீண்டும் கிரீசுக்குள் மட்டையைக் கொண்டுவர தினேஷ் கார்த்திக் திணறினார். விக்கெட் கீப்பர் கில்லிகளை அகற்றும்போது கார்த்திக் பேட் கிரீசில் மேலே காற்றில் இருந்தது.
முதலில் சாத்து வாங்கிய ரஷீத்கான், டி20க்கும் டெஸ்ட் போட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருப்பார், ஒழுங்காக வீசவில்லை எனில் டெஸ்ட் போட்டியே டி20 ரக அடியாக மாறிவிடும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார் அதனால்தான் கடைசி ஸ்பெல்லில் 9 ஓவர்கள் 2 மெய்டன் 15 ரன் ஒரு விக்கெட் என்று அபாரமாக வீச முடிந்தது.
ஆட்ட முடிவில் ஹர்திக் பாண்டியா 10 ரன்களுடனும் அஸ்வின் 7 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். மழை காரணமாக 78 ஓவர்களே வீச முடிந்தது. இந்திய அணி 347/6 என்று முதல்நாள் ஆட்டத்தில் முடிந்துள்ளது.
முரளி விஜய் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களின் லெந்த்தை பிக் செய்ய கஷ்டப்பட்டார், ஆனால் அதன் பிறகு அருமையாக ஆடினார். புஜாராவுக்குப் பதில் பார்மில் உள்ள ராகுலை 3ம் நிலையில் இறக்கியது நல்ல முடிவு. இருவருக்கும் ஆப்கான் பவுலர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை அள்ளி வழங்கினார்கள், அப்பர் கட் ஷாட்டில் விஜய் 12வது டெஸ்ட் சதம் எடுத்தார், உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான 3வது சதமாகும். ரஷீத்கான் கூக்ளியை மிகவும் அனாயசமாக ஷார்ட் பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து ராகுல் தன் அரைசதத்தை எட்டினார். விஜய், சதம் அடித்த பிறகு வபாதார் வைடு ஆஃப் த கிரீஸிலிருந்து வீசிய இன் டிப்பர் பந்தை ஆடாமல் விட்டு எல்.பி.ஆனார். 2 பந்துகள் கழித்து கட் ஆட முயன்று ராகுல் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.
நாளை 2ம் நாள் ஆட்டம் அஸ்வின், பாண்டியா கையில் இருக்கிறது, 450 ரன்கள் எடுத்தால் ஆப்கான் அணி கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.