EBM News Tamil
Leading News Portal in Tamil

சும்மாவாவது எதற்குப் பேச வேண்டும்? ஐபிஎல் இறுதிக்கு முன் சிஎஸ்கே வீரர்கள் கூட்டம் எப்படி? தோனி விளக்கம்

ஐபிஎல் 2018-ன் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பலரும் வயதானவர்கள் அணி, தந்தையர் அணி என்றெல்லாம் கேலி செய்த நிலையில் கடைசியில் கோப்பையை தோனி தலைமையில் தட்டிச் சென்றனர்.
அதுவும் 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு ஓர் அணியைத் திரட்டி ஒரு கொள்கைக்குள் கொண்டு வருவது கடினம் அந்தக் கடினமானப் பணியை மேற்கொண்டவர் தோனி அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பாக ‘தல’ தோனி அணி வீரர்களை அழைத்து உத்திகள், ஆட்டச் சூழ்நிலைகள், பந்து வீச்சு, களவியூகம் என்று சில மணி நேரங்களாவது பேசியிருப்பார் என்றே பலரும் கருதினர்.
ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்கிறார் சிஎஸ்கே சாம்பியன் கேப்டன் தோனி. விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தோனி கூறியதாவது:
போய் கோப்பையை வெல்லுங்கள் பாய்ஸ் என்றார் பிளெமிங் வென்றார்கள். இறுதிப் போட்டி தருணத்தில் ஐபிஎல் தொடர் முழுதும் நாங்கள் எப்படி எங்களை களத்தில் நடத்திக் கொண்டோம் என்பது பற்றி மிகவும் ரிலாக்ஸாகவே இருந்தோம். ஒவ்வொரு வீரரின் பங்கு மற்றும் பொறுப்புகள் தெளிவாகவே இருந்தது. ஆகவே ஏதாவது கூற வேண்டிய, ஆலோசனை வழங்க வேண்டிய தேவையிருந்தால்தான் வழங்க வேண்டும்.
சும்மா ஒரு அணியின் கேப்டன், பயிற்சியாளர் என்பதற்காக வீரர்களைக் கூட்டி ஏதாவது கூறியே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. இறுதிப் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கூட்டம் 5 விநாடிகள் நடந்திருந்தால் பெரிது.
இவ்வாறு கூறினார் தோனி. ஐபில் 2018-ல் தோனி 15 போட்டிகளில் 455 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.