EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்புச் சாம்பியனுமான ரஃபேல் நடால் 11-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே சனிக்கிழமை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹலேப் நேர் செட்களில் அமெரிக்காவின் ல்லோன் ஸ்டீபன்ûஸ வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் ஆடவர் இறுதிச்சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நடாலும், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதினர்.
முதல் செட்டில் தீம் சிறிது போராடினாலும், நடால் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி 6-4 என வென்றார். அதைத் தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் நடாலின் சிறப்பான ஆட்டத்தால் 6-3 என எளிதாக வென்றார். மூன்றாவது மற்றும் இறுதி செட்டிலும் நடாலின் அபார ஆட்டத்தை தீமால் சமாளிக்க முடியவில்லை. துவக்கத்திலேயே 3-1 என நடால் முன்னிலை பெற்றார். இறுதியில் அந்த செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
11-வது முறையாக சாம்பியன்: பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஏற்கெனவே 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், இந்த வெற்றியின் மூலம் 11-வது முறையாக பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
களிமண் மைதானத்தின் முடிசூடா மன்னன்: களிமண் மைதானத்தில் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்துள்ள நடால், பிரெஞ்ச் ஓபன் வெற்றியின் மூலம் தான் களிமண் மைதானத்தின் முடிசூடா மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
மார்க்கரெட் சாதனை சமன்: கடந்த 2005 முதல் பிரெஞ்ச் ஒபன் போட்டியில் 10 முறை நடால் பட்டம் வென்றிருந்தார். தற்போது 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து ஓரே கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மகளிர் பிரிவில் மார்க்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 1960 முதல் 1973 வரை 11 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்தார்.
ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளார். நடால் 17 முறையும், சாம்ப்ராஸ் 14 முறையும் வென்றுள்ளனர். 
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஹெர்பர்ட்-மஹுட் இணை 6-2, 7-6 என்ற செட் கணக்கில் மாராச்-பவிக் இணையை வென்று பட்டம் வென்றது.
மகளிர் இரட்டையர் பிரிவில் சினேகோவா-கிரெஜிகோவா இணை 6-3, 6-3 என நினோமியா-ஹோஸ்மி இணையை வென்றது.