EBM News Tamil
Leading News Portal in Tamil

சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்; உலகக்கோப்பை இங்கிலாந்துக்குத்தான்: ஆலன் டொனால்ட்

இங்கிலாந்திடமிருந்து ஒருபோதும் எதிர்பார்த்திராத ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை ஒருநாள் போட்டிகளில் வளர்த்து வரும் கேப்டன் இயன் மோர்கன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க முடியாத அணியாக திகழச்செய்வார் என்று நம்புகிறார் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட்.
14 ஆண்டுகால பிரமாதமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ் எனும் 360டிகிரி ஓய்வு பெற்றுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கும் கடினமே என்கிறார் ஆலன் டொனால்ட்.
இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் ஆலன் டொனால்ட் கூறியதாவது:
உலகக்கோப்பையை இங்கிலாந்து வெல்லும் வாய்ப்பு ஒன்று உண்டு என்றால் அது இந்த உலகக்கோப்பைதான் என்று நான் உணர்கிறேன்.
இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடப்பதால் அவர்களை வெல்வது கடினம். இந்த கட்டத்துக்கு அந்த அணி வந்துள்ளது என்று நான் நினைத்ததில்லை, ஆனால் இப்போதைய இங்கிலாந்து ஒருநாள் அணியில் அப்படி நான் சிந்திக்குமாறு சில அம்சங்கள் உள்ளன.
ஒருநாள் கிரிக்கெட்டை மிகவும் ஆக்ரோஷமாக ஆடுகின்றனர். எனவே என் உள்ளுணர்வு என்னவெனில் இங்கிலாந்து இந்த உலகக்கோப்பையில் நீண்ட தூரம் செல்லும் என்றே கருதுகிறேன்.
இப்போதைய அணிகளில் திறமை நிறைய இருக்கிறது, ஆனால் இங்கிலாந்து அதன் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் பயிற்சியாளர்கள் சேர்ந்து இன்னொரு வித்தியாசமான ‘மிருகத்தை’ அணியின் அணுகுமுறையில் கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு கூறினார் ஆலன் டொனால்ட்