EBM News Tamil
Leading News Portal in Tamil

டி20 வரலாறு படைத்த யுஏஇ – ‘நொறுங்கிய’ வங்கதேச அணி! | UAE creates T20 history – crushed Bangladesh team


ஐக்கிய அரபு அமீரத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஷார்ஜாவில் நடைபெற்ற 2-வது டி20 சர்வதேசப் போட்டியில் யுஏஇ அணியிடம் வாழ்நாளின் முதல் தோல்வியைச் சந்தித்தது. யுஏஇ அணி இதன் மூலம் வரலாறு படைத்தது.

அதிலும் டாஸ் வென்ற யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வங்கதேச அணி தஞ்சித் ஹசன் (59), லிட்டன் தாஸ் (40) ஆகியோர் தந்த 9 ஓவர் 90 ரன்கள் அதிரடி தொடக்கம் என்னும் வலுவான அடித்தளத்தில், ஷாண்ட்டோ (27) தவ்ஹித் ஹிருதய் (45), ஜாகிர் அலியின் 6 பந்து 18 ரன்கள் விளாசல்களினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய யுஏஇ அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 206/8 என்று த்ரில் வெற்றி பெற்றதோடு வங்கதேசத்தை முதன் முதலில் வீழ்த்திய வரலாற்றுச் சாதனைய நிகழ்த்தியது. யுஏஇ கேப்டன் முகமது வசீம் 42 பந்துகளில் 5 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களை விளாச, முதல் விக்கெட்டுக்காக முகமது சொஹைப் (38) உடன் சேர்ந்து 10 ஓவர்களில் 107 ரன்களை சேர்த்து வலுவான அடித்தளம் அமைக்க, கடைசியில் ஹைதர் அலி, துருவ் பரஸ்கார் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

கேப்டன் வசீம் ஆட்டமிழந்தவுடன் 58 ரன்கள் யுஏஇ அணியின் வெற்றிக்குத் தேவையாக இருந்தது. அப்போது டீம் முயற்சி என்று கூறுவார்களே அதற்கொப்ப 7ம் நிலையிலிருந்து இறங்கிய வீரர்கள் தலா ஒரு சிக்சரை அடித்தனர், கடைசி ஓவரில் துருவ் பரஸ்கார் உறுதியாக ஆடினார். ஹைதர் அலி வெற்றி ரன்களை அடித்தார். அடித்த ரன்னும் ஃப்ரீ ஹிட்டில், ஆனால் ஹைதரும் மதியுல்லா கானும் சரியாக ஓடாமல் கபடி ஆடிவிட்டனர். அங்கு வங்கதேச பீல்டர் தவ்ஹித் ஹிருதய் பந்தை சரியாக சேகரிக்கவில்லை, த்ரோ வருவதற்குள் இரண்டு ரன்களை ஓடி எடுத்து விட்டனர். நீண்ட காலம் புகழ்பெறும் வெற்றி வந்து சேர்ந்தது.

யுஏஇ கேப்டன் அட்டகாசமான ஒரு அதிரடி வீரர் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்தார். வங்கதேச பவுலர் தன்வீர் இஸ்லாம் வீசிய பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பினார். தன்சிம் பந்தையும் மிட்விக்கெட்டில் சிக்சருக்கு அனுப்பினார். மீண்டும் தன்வீர் பந்தை ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்ஸ் விளாசி 3 சிக்சர்களை சடுதியில் அடித்து வங்கதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அதே போல் ராணாவின் வேகமும் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. 3 பவுண்டரிகளை விளாசினார். ரிஷாத் பந்து வீச்சில் தன் 4வது சிக்சரை அடித்தார். ஆனால் வசீமுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது, அவருக்கு ஹிருதய் ஒரு கேட்சை விட்டார். அப்போது வசீம் 63 ரன்களில் இருந்தார். எப்போதுமே பார்மில் இருக்கும் பேட்டருக்கு கேட்சை விட்டால் என்ன ஆகும் அதேதான் இங்கும் நடந்தது, உடனேயே தன்வீரை தன் 5வது சிக்சருக்குத் தூக்கினார் வசீம். சேசிங் யுஏஇ பக்கம் தடம் மாறியது.

வசீம் ஆட்டமிழந்த பிறகு விக்கெட்டுகள் மடமடவென விழுந்தாலும் கடைசியில் வங்கதேச பீல்டிங் சொதப்ப யுஏஇ அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது, யுஏஇ கேப்டன் வசீம் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.