EBM News Tamil
Leading News Portal in Tamil

200 ரன்கள் இலக்கை நோ-லாஸில் வென்ற 2-வது அணி – குஜராத் டைட்டன்ஸ் அசத்தல்! | Gujarat Titans are the 2nd team to achieve the target of 200 runs without any loss


டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் 205/0 என்று விக்கெட் இழப்பின்றி வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை நிகழ்த்தியது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தனது பார்மின் உச்சத்தில் இருக்கும் கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் விளாசிய இன்னிங்சை சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 என்று பின்னுக்குத் தள்ளினார். கேப்டன் ஷுப்மன் கில் 53 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 93 நாட் அவுட். 19 ஓவர்களில் 205 ரன்களுக்கு நோ லாஸ் என்று குஜராத் சாதனை வெற்றி பெற்றது.

இந்த அபார வெற்றி குஜராத் டைட்டன்சின் முதலிடத்தை உறுதி செய்ததோடு, பஞ்சாப் கிங்ஸ் ஆர்சிபி அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழைந்ததும் உறுதி செய்தது. பிளே ஆஃப் சுற்றின் 4-வது இடத்துக்காக டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன.

சிக்கன பவுலர் டி.நடராஜனைப் பதம் பார்த்த சாய் சுதர்சன்: சாய் சுதர்சன் இறங்கியது முதலே சோர்வில்லாத அதிரடியைக் காட்டினார். அக்சர் படேலை பவுண்டரியுடன் தொடங்கிய சாய் சுதர்சன், டி.நடராஜன் வீசிய ஓவரில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று 20 ரன்களை ஒரே ஓவரில் விளாசினார். 3வது ஓவர் முடிவில் சாய் சுதர்சன் 13 பந்துகளில் 35 ரன்களை விளாசியிருந்தார். பிறகு துஷ்மந்த சமீரா, முஸ்தபிசுர் அருமையாக வீசி கட்டுப்படுத்தினர். இதனால் பவர் ப்ளே முடிவில் குஜராத் 59 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

சாய் சுதர்சன் தன் 50 ரன்களை 30 பந்துகளில் எட்ட ஷுப்மன் கில் 19 பந்துகளில் 21 என்று நிதானமாக ஆடிவந்தார்.. ஆனால் 8வது ஓவருக்குப் பிறகு ஷுப்மன் கில் 3 சிக்சர்களை விளாசி 33 பந்துகளில் அரைசதம் எட்டினார். துஷ்மந்த சமீராவை தன் முதல் பவுண்டரி அடித்த கில் அடுத்த பந்தையே எகிறும் சிக்சருக்குத் தூக்கினார்.

15 ஓவர்களில் குஜராத் 154 ரன்களை எட்டியது, கடைசி முயற்சியாக அக்சர் படேல் முஸ்தபிசுர்ரை கொண்டு வந்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை 2 பவுண்டரிகளை சுதர்சன் விளாசினார். பிறகு குல்தீப் யாதவ்வை ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடித்துத் தன் 2வது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். சுதர்சன்தான் இன்னொரு சிக்ஸ் மூலம் குஜராத் வெற்றியை உறுதி செய்தார்.

முன்னதாக கே.எல்.ராகுல் டெல்லி மைதானத்தில் தன் அற்புதமான ஷாட்கள் மூலம் பல தீபங்களை ஏற்றினார். முதலில் சிராஜை அடித்த பேக் ஃபுட் கவர் ட்ரைவ் பிறகு ரபாடாவை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என்று தடம் பதித்தார். ரஷீத் கான் ஓவரையும் விளாசிய ராகுல் அவரை பௌண்டரி அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார்.

2-வது விக்கெட்டுக்காக ராகுல் பங்களிப்பில் 8 ஓவர்களில் 90 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் ராகுல் இன்னிங்சில் அதிர்ஷ்டமும் விளையாடியது, சாய் கிஷோரின் ஒரே ஓவரில் 2 வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் குஜராத் கோட்டை விட்டது. ராகுல் 65 பந்துகளில் 14 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 112 ரன்கள் விளாசினார்.

அபிஷேக் போரெல் 30, அக்சர் படேல் 25, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 என்று கடைசியில் அதிரடி காட்ட டெல்லி 199/3 என்று முடிந்தது. டெல்லி 37 டாட் பால்களை அனுமதித்தது இதனால் தான் ஸ்கோர் 199ல் தேங்கியது. 37 டாட்பால்கள் 25 டாட்பால்களாகக் குறைந்து 12 பந்துகளில் 20-25 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றிருக்கலாம் இங்குதான் டெல்லி அணியிடம் திட்டமிடல் சரியாக இல்லை என்ற விமர்சனத்தை நாம் வைக்க வேண்டியுள்ளது.