நேஹல் வதேரா, சஷாங்க், ஹர்பிரீத் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி | RR vs PBKS, IPL 2025
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. பஞ்சாபின் நேஹல் வதேரா, சஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்த ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நேற்று மாலை 3.30மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.
பிரியன்ஷ் ஆர்யா 9, மிட்செல் ஓவன் 0, பிரப்சிம்ரன் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்து தள்ளாடியது. ஆனால், அதன் பின்னர் களத்துக்கு வந்த நேஹல் வதேரா, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி எதிரணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளியது.
ஸ்ரேயஸ் ஐயர் 25 பந்துகளில் 30 ரன்கள்(5 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும்.
6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஷாங்க் சிங்கும், அஸ்மத்துல்லா ஓமர்ஸாயும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் சஷாங்க் சிங் 30 பந்துகளில் 59 ரன்களும், அஸ்மத்துல்லா 9 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50, வைபவ் சூர்யவன்ஷி 40, சஞ்சு சாம்சன் 20, ரியான் பராக் 13, துருவ் ஜூரெல் 53,ஷிம்ரன் ஹெட்மயர் 11 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் வீரர்கள் அதிரடியாக ரன் குவித்து வெற்றியை நெருங்கி வந்தனர். ஆனால், கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருந்தது. அப்போது களத்தில் துருவ் ஜூரெலும், ஷுபம் துபேவும் இருந்தனர். கடைசி ஓவரை மார்கோ யான்சன் வீசினார்.
இந்த ஓவரின் 3-வது பந்தில் துருவ் ஜூரெலையும், 4-வது பந்தில் ஹசரங்காவை யும் யான்சன் வீழ்த்தினார். கடைசி 2 பந்துகளில் கெவானா மாபாகா 2 பவுண்டரிகளை விளாசினார். இருந்தபோதும் வெற்றிக்குத் தேவையான ரன்களை ராஜஸ்தான் அணியால்எடுக்க முடியவில்லை. பஞ்சாப் தரப்பில் ஹர்பிரீத் பிரார் 3, மார்கோ யான்சன், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோர் தலா2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
3 விக்கெட்களை வீழ்த்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 10 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.