பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல் | IPL 2025: Match 59, RR vs PBKS Match Prediction
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னறே வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக கடந்த 8-ம் தேதி டெல்லி அணியுடன் தரம்சாலாவில் மோதியது. ஆனால் இந்த ஆட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
10 நாட்கள் இடைவேளைக்கு பின்னர் பஞ்சாப் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான மார்கோ யான்சன் விளையாடாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும். அவர், நடப்பு சீசனில் 11 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா ஆகியோரும் பந்துவீச்சில் அர்ஷ்தீப், யுவேந்திர சாஹல் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். காயம் அடைந்துள்ள லாக்கி பெர்குசனுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள கைல் ஜேமிசனும் வலுசேர்க்கக்கூடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட அந்த அணி தொடரை சிறப்பான முறையில் நிறைவு செய்யும் வகையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கக்கூடும்.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்தில் இருந்து மீண்டும் திரும்பவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.