EBM News Tamil
Leading News Portal in Tamil

90.23 மீ. தூரம் ஈட்டியை எறிந்த முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா சாதனை! | Neeraj Chopra becomes first Indian to throw javelin 90 23 meters


தோஹா: தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர், 90+ மீட்டர் தூரத்தை கடந்து ஈட்டி எறிவது இதுவே முதல் முறை.

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார் நீராஜ். தொடர்ந்து இரண்டாவது முயற்சி ‘நோ த்ரோ’ என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து 80.56 மீட்டர், ஃபவுல் மற்றும் 88.20 மீட்டர் தூரம் என அடுத்தடுத்த வாய்ப்புகளில் நீரஜ் ஈட்டியை எறிந்தார்.

இதன் மூலம் அவரது முந்தைய தேசிய சாதனையை தகர்த்துள்ளார். கடந்த 2022-ல் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்தார். தற்போது அதை முறியடித்துள்ளார்.

25 தடகள வீரர்கள் மட்டுமே 90+ மீட்டர் தூரத்தை கடந்து ஈட்டியை எறிந்துள்ளனர். நீரஜ், 25-வது வீரராக இந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஆசிய அளவில் இந்த சாதனையை படைத்துள்ள மூன்றாவது வீரர் ஆகியுள்ளார்.

“90+ மீட்டரை எட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது பயிற்சியாளர் ஜான் ஜெலெஸ்னி இன்று நான் 90+ மீட்டர் தூரம் ஈட்டியை எறியக்கூடிய நாள் என்று கூறினார். என்னால் முடியும் என நானும் நம்பினேன். அடுத்தடுத்த போட்டிகளில் இதை விட அதிக தூரம் ஈட்டியை எறிய முடியும் என்று நான் நம்புகிறேன். அது சார்ந்து எங்கள் பயிற்சி இருக்கும்” என்று நீரஜ் தெரிவித்தார்.

தோஹா டைமண்ட் லீக்கில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், 91.06 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை நீரஜ் பிடித்தார்.