EBM News Tamil
Leading News Portal in Tamil

முஸ்டாபிஸுருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது வங்கதேச கிரிக்கெட் வாரியம்: டெல்லி அணியின் கடைசி 3 ஆட்டங்களில் பங்கேற்கிறார் | Bangladesh Cricket Board grants noc to Mustafizur rahman ipl 2025 delhi capitals


டாக்கா: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கடைசி 3 லீக் ஆட்டங்களில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் பங்கேற்க முடியும்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க் சொந்த காரணங்களுக்கு விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை ரூ.6 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

இதற்கிடையே அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி 20 போட்டியில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார். வங்கதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான 2 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மே 18 முதல் 24-ம் தேதி வரை கலந்துகொள்ள முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கான எதிரான முதல் டி 20 போட்டியில் இன்று விளையாடும் முஸ்டாஸுர் ரஹ்மான், அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் முஸ்டாபிஸுர் களமிறங்கக்கூடும். இதைத் தொடர்ந்து டெல்லி அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் 21-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடனும், 24-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களுக்கு பிறகு முஸ்டாபிஸுர் மீண்டும் வங்கதேச அணியுடன் இணைவார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 தொடரை அடுத்து வங்கதேச அணியானது பாகிஸ்தான் சென்று 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் வரும் 25-ம் தேதி பைசலாபாத்தில் நடைபெறுகிறது.