மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் ரத்து: நிதி திரட்டுவதில் சிக்கல் | lionel Messi led Argentina football team Kerala tour cancelled
சென்னை: வரும் அக்டோபர் மாதம் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இந்த சூழலில் இதற்கான நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அர்ஜெண்டினா அணியின் பயணம் ரத்து ஆகியுள்ளது.
ரூ.30 கோடியை அர்ஜெண்டினா அணியின் வசம் முன்பணமாக கொடுத்து கேரள மாநில அரசு ஒப்பந்தம் செய்ய தவறி உள்ளது. கேரள மாநில அரசும், ஸ்பான்சர்களும் இதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாததே அர்ஜெண்டினா அணியின் இந்திய பயணம் ரத்தாக காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு கால்பந்து உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி இந்தியாவில் ஆட மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த சூழலில்தான் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்துக்கான சர்வதேச அட்டவணை குறித்த விவரத்தை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் சீனா, அங்கோலா மற்றும் கத்தாரில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மெஸ்ஸி இந்தியாவில் விளையாடி இருந்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் வெனிசுலாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜெண்டினா.