ஷமி மீதான வெறுப்பு ‘ட்ரோல்கள்’- ‘சகோதரத்துவம்’ வலியுறுத்தி கோலி காத்த மனித மாண்பு! | Kohli defends human dignity by emphasizing brotherhood over trolls on shami
2021 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது இந்திய கிரிக்கெட் சந்தித்த அவமானகரமான சம்பவம் விராட் கோலி கட்டிக்காத்த மனித மாண்பினால் ஒன்றுமில்லாமல் அடித்து விரட்டப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிகப்பெரிய தோல்வி. பொதுவாக பாகிஸ்தானுடன் தோற்றால் அது இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்காது. கடும் விமர்சனங்கள் எழுவது காலங்காலமான வழக்கமே. ஆனால் வீரர்கள் மீது வசை பாடுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் போல் சித்தரித்து அவர்களது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துவதும் சமீபத்திய வெறுப்புச் சூழலின் அவமானகரமான ‘வளர்ச்சி.’
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியை வர்த்தக விளம்பர நிறுவனங்கள், ஒளிபரப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு சாதாரண கிரிக்கெட் போட்டியை ஏதோ போர் அளவுக்கு ஊதிப்பெருக்கியதும் ரசிகர்களின் உணர்ச்சிகளை கொதிநிலைக்குக் கொண்டு சென்றதையும் மறுப்பதற்கில்லை. ஒரு கிரிக்கெட் போட்டிக்கு என்ன பில்ட்-அப் தேவையோ அதை மட்டும்தான் ஊக்குவிக்க வேண்டும், ஆனால் இங்கு எல்லாமே மிகைதான்.
ஷமி அந்தப் போட்டியில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை கொடுத்தார். இதனையடுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் முழுதும் ஷமியை வசைபாடும் வெறுப்பு ‘ட்ரோல்கள்’ அணிவகுத்தன. அதுவும் குறிப்பாக அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறுக் கருத்துக்கள் அருவருக்கத்தக்க அளவில் பெருகின. ஒரு கட்டத்திற்கு மேல் அணியின் கேப்டன் விராட் கோலி அதனைக் கண்டித்து கேள்வி கேட்கும் மனநிலைக்கு வந்து விட்டார்.
அன்று அவர் உண்மையிலேயே ஷமி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகத் தீர்மானகரமாக நின்றார். அவர் பேசியதை இன்று நினைவுகூர்வது கோலியின் டெஸ்ட் ஓய்வுக்கான பிரியாவிடையாக கொள்ளலாம்:
“களத்தில் நாம் ஏன் சேர்ந்து போராடுகிறோம் என்பதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. சில முதுகெலும்பற்ற கோழைகள், நேரடியாக நின்று பேசத் திராணியில்லாதவர்கள் சமூக ஊடகங்களில் ஒளிந்து கொண்டு பேசும் தைரியமற்றவர்களுக்காக ஆடவில்லை.
தங்கள் அடையாளங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு பேசுகின்றனர். அனைவரையும் கேளிக்கைப் பொருளாக்கி கிண்டலடிப்பது போன்ற விஷயங்கள் இன்றைய உலகில் பொழுதுபோக்கின் மூலாதாரமாகி விட்டது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது மிகவும் துன்பம் தருவது, ஏனெனில் மனித ஆற்றல் இத்தனை கீழ்த்தரமாக செயல்படுகிறது!! இப்படித்தான் அவதூறாளர்களை நான் பார்க்கிறேன்.
ஒருவரை அவர் சார்ந்த மதத்தின் பெயரால் தாக்குதல் தொடுப்பது மனிதன் செய்யக்கூடியதிலேயே மிகவும் நோய்க்கூறான, கீழான விஷயமாகப் பார்க்கிறேன். சில சூழ்நிலைகள் குறித்து நாம் என்ன உணர்கிறோமோ அதைப் பற்றி கருத்து கூறுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. ஆனால் அதற்காக ஒருவரை அவர் சார்ந்த மதம் குறித்து பாகுபாடு காட்டி இழிந்துரைப்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மதம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்கமானது, புனிதமானது. அதை அந்த இடத்திலேயே இருக்க விட்டு விடுவதுதான் நல்லது.
மக்கள் தங்கள் வெறுப்புகளை வெளிப்படுத்துகின்றனர், காரணம் நாங்கள் தனிநபர்களாக என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. களத்தில் எத்தகைய முயற்சிகளை இடுகிறோம் என்ற புரிதல் அவர்களுக்கு இல்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளாக முகமது ஷமி எத்தனை போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார் என்ற புரிதலும் இல்லை. ஜஸ்பிரித் பும்ராவுடன் முகமது ஷமி நம் முதன்மை பவுலர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது.
அவரது இத்தகைய தன்மைகளைப் பார்க்காமல் நாட்டின் மீதான அவரது பற்றுதலைப் பார்க்காமல் அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள், உள்ளபடியே இத்தகைய மனிதர்களுடன் ஒரு நிமிடம் கூட நான் விரயம் செய்யத் தயாராக இல்லை. ஷமியோ, அணியில் உள்ள எவரும் இத்தகைய நபர்கள் மீது எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் ஷமியின் பக்கம் நிற்கிறோம். 200 சதவீதம் அவரை ஆதரிக்கிறோம். அவரைத் தாக்குபவர்கள் மேலும் அதிக பலத்துடன் வேண்டுமானால் வந்து பார்க்கட்டும்.
அணியில் உள்ள சகோதரத்துவம், எங்களது நட்பு இதையெல்லாம் இவர்கள் அசைக்கக் கூட முடியாது. ஒரு கேப்டனாக நான் உறுதியளிக்கிறேன் இத்தகைய வெறுப்புச் சூழ்நிலை 0.0001%. கூட அணிக்குள் ஊடுருவ முடியாத ஒரு பண்பாட்டை கட்டமைத்து காத்து வருகிறோம் என்பதைக் கூறிக்கொள்கிறேன். என் தரப்பிலிருந்து இது முழுமுதல் உத்தரவாதம்.
ஆகவே நாங்கள் ஒரு குழுவாக எப்படி ஒன்றிணைந்திருப்பது என்பதையும் தனிப்பட்ட வீரர்களைக் காப்பது என்பதையும் அறிவோம். வெளியிலிருப்பவர்கள் ‘இந்தியா தோற்க அனுமதி கிடையாது’ என்று கருதுபவர்களிடத்தில் எங்களுக்கு வேலை இல்லை. விளையாட்டை விளையாடுகிறோம். அது எப்படி போகும் என்பதை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். வெளியில் இருப்பவர்கள் கருதும் விஷயங்கள் எங்கள் மத்தியில் எந்த மதிப்பும் இல்லை. தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மேலே செல்வதற்கான வழிகளைத்தான் பார்ப்போம்.” இவ்வாறு கோலி அப்போது பேசியது பிற்பாடு அவரே பல சவால்களைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், அன்றைய தினம் ஷமியின் ஓர்மையைக் காப்பாற்றியதோடு மனித மாண்பையும் காத்தார் விராட் கோலி.